Published : 24 Feb 2015 10:42 AM
Last Updated : 24 Feb 2015 10:42 AM

‘தென்னையப் பெத்தா கண்ணீரு’ தமிழக விவசாயிகளின் சோகம் - வளர்ச்சி வாரியம் மீது புகார்: கவனிக்குமா அரசு?

கொப்பரை உற்பத்தியில் நாட்டிலேயே முதலிடத்தில் தமிழகம் இருந்தபோதிலும், மத்திய தென்னை வளர்ச்சி வாரியத்தின் திட்டங்கள், பலன்கள் தமிழக விவசாயிகளுக்கு முழுமையாக கிடைப்பதில்லை என்கின்றனர் தமிழக விவசாயிகள்.

மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரிய தலைமை அலுவலகம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ளது. தென்னை சாகுபடியை அதிகரித்தல், நவீன தொழில்நுட்பங்களை ஊக்கு வித்தல், ஏற்றுமதி இறக்குமதிக்கான ஆலோசனை வழங்குதல் போன்ற பணிகளை இந்த வாரியம் செய்கிறது.

தமிழகம் முதலிடம்

தென்னை வாரியத்தின் 2011-12 புள்ளிவிவர அடிப்படையில், அந்தமான் நிக்கோபார் தீவுகள் தொடங்கி மேற்கு வங்கம் வரையி லான 18 மாநிலங்களில் 2070.70 லட்சம் ஹெக்டேர் மூலம் 14,940 லட்சம் டன் தேங்காய் கொப்பரை உற்பத்தி ஆகிறது. அதில் தமிழகம் 430.70 லட்சம் ஹெக்டேர் மூலம் 4515.60 லட்சம் டன் உற்பத்தியுடன் முதலிடத்திலும், கேரளம் 766 லட்சம் ஹெக்டேர் மூலம் 3973.90 லட்சம் டன் உற்பத்தியுடன் 2-ம் இடத்திலும் உள்ளன.

மரங்கள் எண்ணிக்கை அடிப் படையில் கேரளம் முதலிடத்தில் உள்ளது. பண்ணை, தோட்டங்கள் மட்டுமின்றி சாலையோரங்கள், வீடுகளில் வளர்க்கப்படும் தென்னை மரங்களும் அங்கு கணக்கெடுக்கப் படுகின்றன. இதனால், கேரள விவசாயிகளுக்கு தென்னை வாரியத்தின் பலன்கள் அதிகம் கிடைக் கின்றன. தமிழகத்தில் வீடுகளில் வளர்க்கப்படும் மரங்கள் கணக்கில் சேர்க்கப்படாததால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.

கணக்கெடுப்பு கோரிக்கை

நெல், கரும்பு விவசாயிகள் பலர் தென்னை விவசாயத்துக்கு மாறி யுள்ளனர். எனவே, மரங்கள் எண்ணிக்கை தொடர்பாக புதிதாகக் கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று தமிழக தென்னை விவசாயிகள் நீண்டகாலமாக கோரிவருகின்றனர். அதுவும் நிறைவேற்றப்படவில்லை.

தமிழகம், கேரளத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு தென்னை களில் வாடல் நோய் ஏற்பட்டது. அப்போது, கேரள விவசாயிகளுக்கு ஒரு மரத்துக்கு ரூ.750 வீதம் மறு சீரமைப்பு நிதி கிடைத்தது. தமிழக விவசாயிகளுக்கு இத்தொகை வழங்கப்படவில்லை.

அக்கறை காட்டாத வாரியம்

தென்னையில் இருந்து தேங்காய் பவுடர், துருவல், வர்ஜின் ஆயில், நீரா உட்பட 43 வகையான மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யவும், அதை ஏற்றுமதி செய்ய வும் தென்னை வளர்ச்சி வாரியம் திட்டங்களை செயல்படுத்தி வரு கிறது. இதை செயல்படுத்த தென்னை விவசாயிகள் இணைந்து ஒரு நிறுவனம் தொடங்கவேண்டும்.

மொத்த மூலதனமான ரூ.1 கோடி யில், மாநில அரசும் தென்னை வாரியமும் தலா ரூ.25 லட்சம் மானியம் வழங்கும். இத்திட்டத்தின் கீழ் கேரளாவில் 12 நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ கத்தில் ஒரு நிறுவனம்கூட தொடங்கப் படவில்லை. தமிழக விவசாயிகளிடம் இதற்கு ஆர்வம் இருந்தும் வாரியம் அக்கறை செலுத்தவில்லை. தென் னையை வளர்த்தால் சகல விதத் திலும் பலனைத் தரும் என்பார்கள். ஆனால், தென்னை வளர்ச்சி வாரியம் பாராமுகத்துடன் நடந்து கொள்வதால் எங்களுக்கு எந்த பலனும் கிடைப்பதில்லை என்று வருத்தத்துடன் கூறுகின்றனர் விவ சாயிகள்.

மடத்துக்குளம் தென்னை உற்பத்தி யாளர் கூட்டமைப்பு தலைவர் ஜெயமணி கூறும்போது, ‘‘மானியம், தொழில்நுட்பம் மற்றும் வாரியம் வழங்கும் இதர பலன்கள் அனைத் தும் நம் விவசாயிகளுக்கு முழுமை யாக கிடைக்க வேண்டுமானால், விவசாயிகள் சங்க பிரதிநிதிகளைக் கொண்ட சிறப்புக் குழுவை ஏற் படுத்தி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

அரசு, கட்சிகளின் கவனத்துக்கு..

சென்னை அண்ணா நகரில் உள்ள தென்னை வளர்ச்சி வாரிய மண்டல இயக்குநர் அலுவலக வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘‘தென்னை மரங்கள் குறித்த கணக்கெடுப்பை தமிழக புள்ளியியல் துறை நடத்துகிறது. தமிழகத்தில் தென்னை வாரியத்தின் மானியத்துடன் 64 மதிப்புக்கூட்டு பொருள் உற்பத்தி மையங்கள் செயல்படுகின்றன.

வறட்சி, வாடல் நோய் காரணமாக தென்னை மரங் கள் பாதிக்கப்படும்போது வறட்சி நிவாரணம், நிதி கேட்டு கேரளத்தில் இருந்து மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப்படுகிறது. அரசும், கட்சி களும் முனைப்புகாட்டி நிதியை பெற்றுத் தருகின்றன. தமிழகத்தில் அதுபோன்ற சூழல் இல்லை’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x