

தமிழகத்திலிருந்து மணல் ஏற்றிச் சென்ற 300 லாரிகளை, உரிய அனுமதியின்றி மணல் கொண்டு வந்ததாகக் கூறி கர்நாடகாவில் அம்மாநில அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி கண்ணம்மாள் உத்தரவின் பேரில் ஓசூர் சிப்காட் போலீஸார் நேற்று வாகனத் தணிக்கை மேற்கொண்டனர்.
அவ்வழியாக மணல் ஏற்றி வந்த 16 லாரிகளை நிறுத்தி சோதனை நடத்தினர். ஆவணங்களை ஆய்வு செய்தபோது கரூர், திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்து மணல் எடுக்கப்பட்டு ஓசூர் வரை அனுமதி பெற்று, கர்நாடகாவுக்கு கடத்தப் படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து, 16 லாரிகளையும், அதில் இருந்த 64 யூனிட் மணலையும் பறிமுதல் செய்தனர். மேலும், ஓசூரைச் சேர்ந்த கிரண் (27), சுரேஷ் (30), சூளகிரி கோவிந்தராஜ் (31), உட்பட 12 பேரை கைது செய்தனர்.
சோதனையின்போது தப்பி ஓடிய 4 ஓட்டுநர்களை போலீஸார் தேடி வருகிறார்கள். கடந்த இரு தினங்களில் மணல் கடத்தியதாக 28 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.