Last Updated : 25 Feb, 2015 10:36 AM

 

Published : 25 Feb 2015 10:36 AM
Last Updated : 25 Feb 2015 10:36 AM

சென்னை கோயிலில் விநோதம்: 11 தலைகள், பேட், பந்துடன் கிரிக்கெட் விநாயகர்- இந்தியா ஆடும் நாட்களில் அலைமோதும் ரசிகர்கள்

திரும்பிய பக்கமெல்லாம் கிரிக்கெட் பற்றிய பேச்சு. உலகக் கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. இந்தியா பங்கேற்கும் போட்டி என்றால் தவறாமல் தொலைக்காட்சி முன்பு ஆஜராகிவிடுகிறார்கள் ரசிகர்கள். சென்னை அண்ணா நகர் ரசிகர்கள் ஒரு படி மேல். பாளையத்தம்மன் கோயிலில் இருக்கும் கிரிக்கெட் விநாயகருக்கு அர்ச்சனை செய்கிறார்கள்.

கிரிக்கெட் விநாயகரை அமைத்த வர் கே.ஆர்.ராமகிருஷ்ணன் (67). அண்ணா நகரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கிறார். கடந்த 2001-ல் அவர்களது குடியிருப்பு முன்பு விநாயகர் கோயில் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது, ஆஸ்திரேலியாவில் இந்தியா- ஆஸி. டெஸ்ட் போட்டி நடந்த நேரம். நேரலையில் ஆட்டத்தைப் பார்க்கிறார் ராமகிருஷ்ணன். ஆஸி. அணி வெற்றிபெறும் நிலையில் இருக்கிறது. ‘போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், கிரிக்கெட் விநாயகர் என்றே பெயர் வைத்துவிடுகிறேன்’ என்று பிரார்த்திக்கிறார். இந்திய அணி வெற்றி பெற, ‘கிரிக்கெட் விநாயகர்’ என்றே பெயர் சூட்டப்படுகிறது.

பெயர் மட்டுமல்லாது, இவருக்கான வழிபாடும் வித்தியாசம். ‘ஓம் பவுண்டரி அடிப்போனே போற்றி, சிக்ஸர் அடிப்போனே போற்றி’ என்று தமிழில் 108 மந்திரங்களையும், ‘ஓம் விக்கெட் கீப்பராய நமஹ, ஓம் ஹேட்ரிக் லேனேவாலே நமஹ, ஓம் ஆல்ரவுண்டராய நமஹ’ என்று இந்தியில் 108 மந்திரங்களையும் தயாரித்து வைத்திருக்கிறார் ராமகிருஷ்ணன். தினந்தோறும் இந்த மந்திரங்களுடன் அர்ச்சனையும் நிவேதனம், தீபாராதனையும் கிரிக்கெட் விநாயகருக்கு உண்டு. இந்தியா பங்கேற்கும் போட்டிகள் என்றால் சிறப்பு வழிபாடுகள், ஆராதனைகள் நடத்துவார்.

மொத்தம் 6 விநாயகர் சிலைகள். நடுநாயகமாக இருக்கும் விநாயகர், இந்திய அணியின் 11 வீரர்களையும் குறிக்கும் விதமாக 11 தலைகள், ஒரு கையில் பேட், இன்னொரு கையில் பந்து, கால்களில் பாதுகாப்பு கவசம் என காட்சி தருகிறார். மற்றவர்கள் வலதுகை பேட்ஸ்மேன், இடதுகை பேட்ஸ்மேன், பவுலிங், கீப்பிங், ஃபீல்டிங் விநாயகர்கள். இவை மாமல்லபுரத்தில் பிரத்தியேகமாகச் செய்யச் சொல்லி பெறப்பட்ட சிலைகள்.

நாள் ஆக ஆக, கிரிக்கெட் விநாயகர் பிரபலமாகத் தொடங்கினார். இதையடுத்து, கிழக்கு அண்ணா நகர் அன்னை சத்யா நகரில் புது ஆவடி சாலையில் உள்ள ஸ்ரீபாளையத்தம்மன் கோயிலில் ஆலய நிர்வாகத்தினரின் அனுமதியுடன் கிரிக்கெட் விநாயகர் சிலைகள் கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று பிரதிஷ்டை செய்யப்பட்டன.

இதுபற்றி ராமகிருஷ்ணன் மேலும் கூறும்போது, ‘‘13 ஆண்டுகளுக்கு மேலாக கிரிக்கெட் விநாயகரை வழிபடுகிறேன். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும் முன்பாக, கடந்த 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று கோயிலில் கிரிக்கெட் கணபதி ஹோமம் நடத்தினேன். நம் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பெயர்களை தேங்காயில் தனித்தனியே எழுதி வைத்துள்ளேன். இந்தியா ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெற்றதும், இவை சிதறுகாயாக உடைக்கப்படும்’’ என்றார்.

இந்திய அணி விளையாடும் நாட்களில் இக்கோயிலில் கிரிக்கெட் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ‘‘கடந்த 15-ம் தேதி இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு முன்பும் இக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இந்தியா வென்றது. கடந்த ஞாயிறன்றும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. கடைசி வரை இந்தியாவை வெற்றி பெறச் செய்து கிரிக்கெட் விநாயகர் கட்டாயம் உலகக் கோப்பையை பெற்றுத் தருவார்’’ என்கிறார் ராமகிருஷ்ணன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x