

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, காங்கிரஸ் உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ் எழுப்பிய கேள்விக்கு வீட்டுவசதித் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் அளித்த பதில்:
குளச்சல் தொகுதி மணவாளக்குறிச்சி பேரூராட்சி சின்னவிளையில் மீனவர்களின் 84 வீடுகள் ஆபத்தான நிலையில் இருப்பதாக உறுப்பினர் கூறினார். அவர்களுக்கு மீன்வளத் துறை மூலமாகத்தான் வீடுகள் கட்டிக் கொடுக்க முடியும். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கட்டித்தர முடியாது.
தமிழகம் முழுவதும் அரசு ஊழியர் வாடகை குடியிருப்புகளில் 3,112 வீடுகள் காலியாக உள்ளன. சென்னையில் மட்டும்தான் அரசு ஊழியர் வாடகை குடியிருப்புகளில் பற்றாக்குறை உள்ளது. பிற மாவட்டங்களில் வீடுகள் காலியாக இருக்கின்றன. அரசு ஊழியர்களுக்கான வீட்டுக் கடன் ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக அதிகரிக்கப்பட்டதாலும், 6-வது சம்பள கமிஷனில் கணிசமான அளவு சம்பளம் உயர்ந்திருப்பதாலும் அரசு ஊழியர்கள் தனியார் வீடுகளை நாடுகின்றனர் என்றார் அமைச்சர்.