Published : 10 Feb 2015 04:04 PM
Last Updated : 10 Feb 2015 04:04 PM

செங்கம் அருகே 134 பீரங்கி குண்டுகள் கண்டெடுப்பு: 16-ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டவை

செங்கம் அருகே 16 மற்றும் 17-ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட 134 பீரங்கி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கோட்டை மேடு பகுதியில் உள்ள ஜோதி என்பவ ருக்கு சொந்தமான விவசாய நிலத் தில் இருந்து பழங்காலத்தில் யுத்தத் துக்கு பயன்படுத்தப்பட்ட 134 குண்டு கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றை மீட்டு வருவாய்த் துறை யிடம் ஒப்படைத்த தொல்லியல் ஆர்வலர் பிரேம்ஆனந்த் கூறும்போது, “விவசாய நிலத்தில் வாழைக்கன்று நடுவதற்காக தொழிலாளர் கோகுலகிருஷ்ணன் என்பவர் சில நாட்களுக்கு பள்ளம் தோண்டியுள்ளார். அப்போது, ஒரு பானை கிடைத்துள்ளது. அதில், 134 பீரங்கி குண்டுகள் இருந்துள்ளன. அதனை எடுத்து வெளியே போட்டு விட்டு, தொழிலாளர் சென்றுவிட் டார். இதையறிந்த நான், நேற்று (நேற்று முன் தினம்) நேரில் சென்று பார்த்தேன். அங்கிருந்த குண்டுகள் குறித்து ஓய்வுபெற்ற தொல்லியல் துறை அதிகாரி வெங்கடேசன் மற்றும் தருமபுரி அருங்காட்சியக துணை இயக்குநர் சுப்ரமணி ஆகியோரிடம் விளக்கம் கேட்டேன். அவர்கள் மூலமாக, அது திப்பு சுல்தான் காலத்தில் பயன்படுத்தப்பட்ட “கல் பீரங்கி குண்டுகள்” என்பது தெரியவந்தது.

இதையடுத்து, இந்த விவரத்தை செங்கம் வருவாய்த் துறைக்கு தகவல் தெரிவித்து, அவர்களிடம் 134 பீரங்கி குண்டுகளை ஒப்படைத்தேன். ஒவ்வொன்றும் சுமார் 350 கிராம் எடை கொண்டது. லட்டு போன்று அழகாக உள்ளது. கோட்டைமேடு பகுதி என்பது நன்னன் என்ற குறுநில மன்னன் ஆட்சி புரிந்த இடம். அந்த இடத்தில் பழங்கால சுவர்கள் உள்ளன. அவை சேதம் அடைந்து வருகின்றன. அவற்றைப் பாதுகாக்க வேண்டும். எங்கள் பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்தால், மேலும் பல பழங்கால நினைவுச் சின்னங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது” என்றார்.

இதுகுறித்து வட்டாட்சியர் தினகரன் கூறும்போது, “கோட்டை மேடு பகுதியில் இருந்து கைப் பற்றப்பட்ட 134 குண்டுகளும், 16 மற்றும் 17-ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டவை. அதனை தொல்லியல் துறை மூலமாக அருங் காட்சியகத்தில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் ” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x