

சென்னையில் இயக்கப்பட்டு வரும் சிற்றுந்துகள் மூலம் ரூ.24.41 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கூறியதாவது:
"அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்கு குளிர்சாதன பேருந்து இயக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். அதன்படி, ரூ.19 கோடி செலவில் 50 குளிர்சாதன பேருந்துகளுக்கு கூண்டு கட்டும் பணி நடக்கிறது.
இந்த ஆட்சியில் 1,436 புதிய வழித்தடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் வசதிக்காக இயக்கப்படும் 100 சிற்றுந்துகளில் இதுவரை 3 கோடியே 25 லட்சத்து 58 ஆயிரதது 386 பேர் பயணம் செய்துள்ளனர். இதன்மூலம் ரூ.24 கோடியே 41 லட்சத்து 10 ஆயிரம் வருவாய் கிடைத்துள்ளது" என்றார் அமைச்சர்.