Published : 17 Feb 2015 03:57 PM
Last Updated : 17 Feb 2015 03:57 PM

ஜெயலலிதாவை ஆளுநர் உரையில் பாராட்டியது வேடிக்கை: கருணாநிதி

'சடங்குக்காக தயாரிக்கப்பட்டதோ என்ற வகையிலேதான் உள்ளது. ஆளுநர் உரை யாருக்கும் நிறைவளிக்கக் கூடிய உரையாக இல்லை; முழுதும் நீர்த்துப் போன உரை' என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தனது உரையில் ஆளுநர் பாராட்டியிருப்பது வேடிக்கையாகவும் வினோதமாகவும் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆளுநர் வழக்கத்திற்கு மாறாகத் தாமதமாக நிகழ்த்தப்பட்ட தனது உரையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார்.

பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நான்காண்டு சிறைத் தண்டனையும் நூற்று கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு, பதவி பறி போய் இருப்பவரைத் தனது உரையில் ஆளுநர் பாராட்டியிருப்பது வேடிக்கையாகவும் வினோதமாகவும் உள்ளது.

அரசியல் சட்ட அந்தஸ்துள்ள ஆளுநர், தண்டனைக்கு ஆளாகியிருக்கும் ஒருவரைச் சட்டப் பேரவையிலேயே பாராட்டிப் பேசுவது உகந்தது தானா என்பதை நடுநிலையாளர்கள் தான் கூற வேண்டும்.

அரசினர் தமிழ் மொழியை வளர்க்க பல திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும் ஆளுநர் உரை கூறுகிறது. கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட செம்மொழி அந்தஸ்தை எந்த அளவுக்கு இந்த ஆட்சி மதிக்கிறது என்பதிலிருந்தும், அரசு ஆரம்பப் பள்ளிகளிலேயே ஆங்கிலத்தைப் பயிற்று மொழி ஆக்குவதில் அதிமுக அரசு பேரார்வம் கொண்டுள்ளது என்பதிலிருந்தும் எந்த அளவுக்குத் தமிழ் மொழியை வளர்க்க இந்த அரசு செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

பாஜக அரசுக்கு வரவேற்பு

பத்தி 11இல் வரிகள் சீர்திருத்தம் பற்றி கூறப்பட்டுள்ளது. நிதி நிலை அறிக்கையிலே கூறப்பட வேண்டிய கருத்துகளை ஆளுநர் உரையிலே கூறியிருக்கிறார்கள். மத்திய திட்டக் குழு, பண்டித நேரு அவர்களால் தொடங்கப்பட்டு கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக அனைத்து மாநிலங்களுக்கும் பயனுள்ள வகையில் செயல்பட்டு வந்தது. பண்டித நேரு அவர்களால் தொடங்கப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக அந்த அமைப்பினை தற்போது பாஜக அரசு பெயர் மாற்றியிருப்பதை ஆளுநர் உரையில் வரவேற்றிருக்கிறார்.

மத்திய திட்டக் குழு கலைப்பு என்பதால் மாநிலத்தில் உள்ள திட்டக் குழுவின் கதி என்னவாகும் என்பது பற்றியெல்லாம் எதுவும் கூறப்படவில்லை. தமிழக அரசும் மாநிலத் திட்டக் குழுவைக் கலைத்து விடுமா? விலையில்லா ஆடுகள், மாடுகள் கொடுத்தது பற்றி ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆட்சியினால் அறிவிக்கப்பட்ட விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி போன்றவை இன்னும் 90 லட்சம் பேருக்கு வழங்கப்படவில்லை என்ற செய்தி ஏடுகளிலே வந்துள்ளது. இவர்கள் வழங்கிய ஆடுகளும், மாடுகளும் ஒரு சில மாதங்களிலேயே சந்தைகளில் விற்கப்படுகின்றன என்ற தகவலும் வந்து கொண்டுதான் உள்ளது.

மறந்தே போன மோனோ ரயில் திட்டம்

சிமெண்ட் மூட்டை ஒன்றுக்கு 190 ரூபாய்க்குக் கொடுப்பதாகவும், அதை ஒரு சாதனை என்றும் ஆளுநர் உரை கூறுகிறது. ஆனால் வெளி மார்க்கெட்டில் சிமெண்ட் விலை 400 ரூபாய் என்றும், அம்மா சிமெண்ட் ஊழலுக்குத் தான் பயன்படுகிறது என்றும் தான் செய்திகள் வருகின்றன. மெட்ரோ ரெயில் திட்டம் பற்றி ஆளுநர் உரையில் கூறப் பட்டுள்ளது. இந்த ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் மெட்ரோ ரெயில் திட்டத்தைப் பழித்தும், மோனோ ரெயில் திட்டம் தான் சிறந்தது என்றும் கூறி வந்தார்கள். ஆனால் காலம் கடந்த ஞானோதயத்தின் காரணமாக இந்த உரையில் மோனோ ரெயில் திட்டத்தை அப்படியே மறந்து மறைத்து விட்டார்கள்.

மின் உற்பத்தித் திட்டம் பற்றி ஆளுநர் உரையில் ஒரு பத்தி உள்ளது. ஆனால் அதிலே ஒரு வரி கூட இந்த ஆட்சியினர் அதிக விலை கொடுத்து தனியாரிடம் வாங்கும் மின்சாரம் பற்றியும் அதனால் அரசுக்கேற்படும் மிகப் பெரும் இழப்பு பற்றியும்கூறவே இல்லை.

அதுபோலவே சாலைகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. ஆனால் நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளை யெல்லாம் தனியாரிடம் தாரை வார்த்திருப்பதாகச் சொல்லப்படுகிறதே, அதற்கு என்ன விளக்கம் என்று ஆளுநர் உரையிலே கூறப்படவே இல்லையே? அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 2,58,382 கோடி ரூபாய் அளவுக்கு கூடுதல் முதலீடுகளை ஈர்த்திருப்பதாக ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது.

எந்தெந்த தொழில்கள் எவ்வளவு முதலீட்டில் இந்த ஆட்சியில் தொடங்கப்பட்டுள்ளன என்ற விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட ஆட்சியினர் முன் வருவார்களா? இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற முதலீடுகளை ஈர்க்கும் முன்னோட்ட மாநாட்டிலே கூட எதிர்பார்த்த அளவுக்கு யாரும் வரவில்லை என்றும், அதிமுக ஆட்சியில் தொழில் தொடங்குவதற்கான சூழல் இல்லை என்று தொழில் முனைவோர் கருதுவதாகவும்தான் ஏடுகள் புகைப்படத்தோடு செய்தி வெளியிட்டிருந்தன. கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் அக்டோபர்த் திங்களில் முதலீட்டார்களை ஈர்க்கும் மாநாட்டினை நடத்துவதாக அறிவித்தார்கள். ஆனால் அந்த மாநாடு நடைபெறவே இல்லை என்பதோடு இந்த ஆண்டு மே திங்களில் அதை நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

பன்னீர்செல்வத்தின் பெயர் பரவிவிடக்கூடாது என்பதலா?

பொதுவாக ஆளுநர் உரை என்பது அடுத்த ஓராண்டில் அரசு செய்ய விருக்கின்ற பணிகள், திட்டங்கள் பற்றிய கொள்கை விவரங்களை அறிவிக்கக் கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால் இந்த ஆண்டு ஆளுநர் படித்த உரை கடந்த ஆண்டில் இந்த ஆட்சியினர் என்னென்ன செய்தார்கள் என்பது பற்றிய விளம்பர உரையாக இருக்கிறதே தவிர, அடுத்த ஆண்டுக்கு ஆக்க பூர்வமான திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஒருவேளை ஜெயலலிதா முதலமைச்சராக இல்லாத காரணத்தால், பன்னீர்செல்வத்தின் பெயர் பரவி விடக் கூடாது என்பதற்காக இந்த ஆளுநர் உரை சடங்குக்காக தயாரிக்கப்பட்டதோ என்ற வகையிலே தான் உள்ளது. மொத்தத்தில் ஆளுநர் உரை யாருக்கும் நிறைவளிக்கக் கூடிய உரையாக இல்லை; முழுதும் நீர்த்துப் போன உரை!'' என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x