

நேரடி மானியத் திட்டத்துக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மாநில அரசுகள் மூலம் மானியம் வழங்க வேண்டும் என பிரதமருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்தமுருகன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ஆதார் அடையாள அட்டை வழங்குவதை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, அரசின் நலத் திட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஆதார் அடையாள அட்டை கேட்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. இந்த தடையை விலக்கக் கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், தற்போது வீட்டு உபயோக எரிவாயு உருளைக்கான மானியம் பெற ஆதார் அடையாள அட்டை மற்றும் வங்கி கணக்கு எண் ஆகியவற்றை சமர்ப்பிக்குமாறு இணைப்புதாரர்களை எரிவாயு நிறுவனங்கள் கேட்கின்றன. இது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. ஆதார் அட்டையைக் கேட்பதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நேரடி மானியத் திட்டம் நாடு முழுவதும் 54 மாவட்டங்களில் அமலில் உள்ளது. தமிழகத்தில் 91 சதவீத எரிவாயு இணைப்புதாரர்கள் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். எஞ்சிய 9 சதவீத இணைப்புதாரர்கள் பெயரில் வங்கிக் கணக்குகள் தொடங்கு வதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தால் ஒரு கோடி போலி இணைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த இணைப்புகளுக்கு மானியம் வழங்குவது நிறுத்தப் பட்டதால் அரசுக்கு கடந்த ஆண்டு ரூ.3948 கோடி மிச்சமானது. நேரடி எரிவாயு மானியத் திட்டத்தால், போலி எரிவாயு இணைப்புகள் பெறுவது தடுக்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ்.ரவி ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக உணவுப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் எஸ்.கோபாலகிருஷ்ணன் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:
நேரடி எரிவாயு மானியத் திட்டம் 15.11.2014 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக அரசு அனுப்பிய கடிதத்தில், வங்கிகள் இல்லாத கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு எவ்வாறு மானியம் வழங்கப்படும் என்பது குறித்து தெளிவாக்கப்படவில்லை. இதுபோன்ற பிரச்சினைகளைக் களைய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு மத்திய அரசு இதுவரை உரிய விளக்கம் அளிக்கவில்லை.
மேலும், மானியத் திட்டங்களை மாநில அரசுகள் மூலம் செயல்படுத்த வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதுதவிர மத்திய அரசு உர மானியம், மண்ணெண்ணெய் மானியம் மற்றும் பொதுவிநியோக திட்டத்துக்கான மானியத்தை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கும் தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தற்போது, மாற்றிமைக்கப்பட்ட நேரடி மானியத் திட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டப்படி ஆதார் அட்டை கட்டாயம் அல்ல. எரிவாயு நிறுவனங்கள் அனைத் தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. மானியத் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. மாநில அரசுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை எனக் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, விசாரணையை மார்ச் 10-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.