Published : 03 Feb 2015 12:18 PM
Last Updated : 03 Feb 2015 12:18 PM

தேர்தலில் பண பலத்தை ஒழிக்க தேர்தல் ஆணையத்துக்கு கூடுதல் அதிகாரம்: ராமதாஸ் யோசனை

தேர்தலில் பண பலத்தை ஒழிக்க தேர்தல் ஆணையத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் அளிக்கப்படுவதை கடும் குற்றமாகக் கருதி 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கும் வகையில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தைத் திருத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இந்த நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது.

வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவது தான் ஒட்டுமொத்த ஊழலுக்கும் தொடக்கப்புள்ளி ஆகும். 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்து தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த ஐந்தாண்டுகளில் 2 லட்சம் கோடி ஊழல் செய்யும் கலாச்சாரத்தை உருவாக்கியது வாக்குக்கு பணம் கொடுக்கும் வழக்கம் தான்.

புதிய சட்டத்திருத்தத்தால் ஓட்டுக்கு பணம் தரப்படுவதை ஓரளவு தடுக்க இது உதவும் என்ற போதிலும், இச்சட்டத்தால் ஓட்டுக்கு பணம் தரும் கலாச்சாரமே ஒழிந்து விடும் என எதிர்பார்ப்பது யதார்த்தத்திற்கு எதிரான செயலாகவே இருக்கும்.

இப்போதுள்ள நடைமுறைப்படி மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் சட்டத்தின் 123 ஆவது பிரிவின்படி வாக்குக்கு பணம் தருவதும், பெறுவதும் குற்றம்; இந்த குற்றத்திற்காக இந்திய தண்டனைச் சட்டத்தின் 171பி மற்றும் இ பிரிவுகளின்படி ஓராண்டு வரை சிறை தண்டனை அளிக்க முடியும் என்ற போதிலும் இதுவரை யாருக்கும் தண்டனை பெற்றுத்தரப்படவில்லை.

இந்த சட்டப்பிரிவின்படி குற்றஞ்செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்ற வாரண்ட் பெற வேண்டும் என்ற நடைமுறை மட்டுமே இதற்குக் காரணமல்ல. தேர்தல் ஆணையம் பகுதி நேர அதிகாரம் கொண்ட அமைப்பாக இருப்பதும், ஆட்சியில் இருப்பவர்கள் இத்தகைய தவறுகளைச் செய்யும் போது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயாராக இல்லை என்பதும் தான் பண பலத்தை பயன்படுத்துபவர்கள் தண்டிக்கப்படாததற்கு காரணம்.

தமிழ்நாட்டில் 2011, 2014 ஆகிய தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம் தர முயன்றதாக பலர் கையும், களவுமாக பிடிபட்ட போதிலும் அவர்களில் ஒருவர் கூட தண்டிக்கப்படாததற்கு இதுவே காரணம் ஆகும். உதாரணத்திற்கு, தேர்தல் காலத்தின்போது மட்டும் ஆணையம் அதிகாரம் பெற்ற அமைப்பாக இருக்கும்.

அந்த நேரத்தில் ஆணையத்தின் உத்தரவை மதித்து தவறு செய்தவர்கள் மீது அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்கிறார்கள். ஆனால், அவ்வாறு ஓட்டுக்கு பணம் தரும் குற்றத்தை செய்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், ஆணையத்தின் அதிகாரம் முடிவடைந்த பிறகு அவர்கள் மீது அதிகாரிகள் தொடர் நடவடிக்கை மேற்கொள்வதில்லை. இப்போக்கு மாற்றப்பட வேண்டுமானால் தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் அதிகரிக்கப்படவேண்டும்.

தேர்தலில் பணபலத்தைக் கட்டுப்படுத்த விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை கொண்டு வரலாம் என்ற முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் லிங்டோவின் கருத்தும் பரிசீலிக்கப்பட வேண்டியது தான்.

அத்துடன் கீழ்க்கண்ட நடவடிக்கைகள் குறித்தும் மத்திய அரசு ஆராய வேண்டும்.....

1) தேர்தல் நடைபெறும் மாநிலங்களில், தேர்தலுக்கு முன் மூன்று மாதங்கள் தொடங்கி தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் வரை குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்த வேண்டும்.

2) தேர்தல் குற்றங்கள் குறித்த வழக்குகள் 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கப்பட வேண்டும்; இவ்வழக்கு விசாரணையை கண்காணிக்கும் அதிகாரம் ஆணையத்திற்கு வழங்கப்பட வேண்டும்.

3) எந்தெந்த தொகுதியில் எல்லாம் ஓட்டுக்கு பணம் தரப்பட்டதற்கான முதல்கட்ட ஆதாரங்கள் உள்ளனவோ அங்கெல்லாம் தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும்.

இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் தான் தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்து ஜனநாயகம் படுகொலை செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்த முடியும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்" என ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x