

தேர்தல் முறைகளில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ண மூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.
திருவல்லிக்கேணி கலாச்சார அகாடமி மற்றும் கஸ்தூரி சீனிவாசன் நூலகம் சார்பில் ‘டெல்லி தீர்ப்பும், அரசியலும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் மயிலாப்பூரில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் லோக்சத்தா கட்சித் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயண், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.எஸ்.ராகவன் ஆகியோர் பங்கேற்றனர். அவர்கள் பேசியதாவது:
ஜெயபிரகாஷ் நாராயண்: டெல்லியில் நட்சத்திர தலைவர் களுடன், அதிக பணத்தை செலவிட்டு பிரம்மாண்ட பிரச்சாரத்தை பாஜக மேற்கொண் டது. ஆம் ஆத்மி கட்சியோ, சிறு பகுதிகளுக்கெல்லாம் சென்று, குறைவான மக்கள் கூட்டத்துக்கு மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்டது. இந்த எளிய பிரச்சார நடைதான் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத் தந்துள்ளது. பணத்தால் வெற்றி பெறமுடியும் என்ற நம்பிக்கையை டெல்லி தீர்ப்பு உடைத்தெரிந்துள்ளது.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி: டெல்லி தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் 67 இடங்களைப் பிடித்த ஆம் ஆத்மி 54 சதவீத வாக்குகளைத்தான் பெற்றுள்ளது. 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக 32 சதவீதமும், ஒன்றிலும் வெற்றி பெறாத காங்கிரஸ் 9 சதவீதமும் பெற்றுள் ளன. அதனால், தேர்தல் முறையை திருத்த வேண்டும். இந்தத் தேர்தலில் கருத்துக்கணிப்புகளை வெளியிட்ட 18 ஊடகங்களில், 2 ஊடகங்கள் மட்டுமே உண்மையான முடிவை ஓரளவுக்கு நெருங்கின. இந்தக் கருத்துக் கணிப்புகள் அறிவியல் பூர்வமாக இல்லை. அதனால் இவற்றை தடை செய்ய வேண்டும்.
பி.எஸ்.ராகவன்: கடந்த 9 மாதங்களில் மக்கள் நல திட்டங்களைச் செய்யத் தவறிய பிரதமர் மோடிக்கு மக்கள் தெரிவித்துள்ள எச்சரிக்கைதான் டெல்லி தேர்தல் முடிவு. ஆம் ஆத்மி தனது தேர்தல் அறிக்கையில் 70 வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. அதை செயல்படுத்த ரூ.10 லட்சம் கோடி தேவை. அவ்வளவு வருவாய் டெல்லி அரசிடம் இல்லை. இதுபோன்ற சாத்தியமற்ற வாக்குறுதிகளை ஆம் ஆத்மி கட்சி வழங்கக் கூடாது.
இவ்வாறு அவர்கள் பேசினர்.