

நில அபகரிப்பாளர்களிடம் இருந்து ரூ.2,354 கோடி மதிப்புள்ள நிலம் மற்றும் வீட்டு மனைகள் மீட்கப் பட்டு உரியவர்களிடம் ஒப்படைக் கப்பட்டுள்ளன. உயர் நீதிமன்ற உத்தரவால், நிலஅபகரிப்பு வழக்குகள் எதுவும் தள்ளுபடி ஆகாது என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று 3-வது நாளாக விவாதம் நடந்தது. இதில் பேசிய திமுக உறுப்பினர் ஐ.பெரியசாமி, ‘‘நிலஅபகரிப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கிறோம் என்று சொல்லி தனிப் பிரிவுகள், சிறப்பு நீதிமன்றங்களை அமைத்து பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டீர்கள். ஆனால், அதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு பிரிவுகள் மற்றும் சிறப்பு நீதிமன்றங்களை ரத்து செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்றார்.
அப்போது முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறுக்கிட்டு பேசியதாவது:
நில அபகரிப்பு புகார்களை விசாரிப்பதற்காக காவல்துறையில் மாவட்ட வாரியாக 39 நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன. கடந்த டிசம்பர் வரை 2,838 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2,905 பேர் கைது செய்யப்பட்டனர். ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து இதுவரை ரூ.2,354 கோடி மதிப்புள்ள 4,870 ஏக்கர் நிலம், 32,19,384 சதுர அடி வீட்டு மனைகள் மீட்கப்பட்டன. அவை 2,637 நில உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.
நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவுகள் மற்றும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், சிறப்புப் பிரிவுகள் மற்றும் தனி நீதிமன்றங்களை அமைத்து பிறப்பித்த அரசாணைகளை ரத்து செய்தும் அரசு விரும்பினால் இதுசம்பந்தமாக புதிய சட்டத்தை இயற்றலாம் என்றும் தெரிவித்தது. நிலஅபகரிப்பு என்ற தொடரின் பொருள் அரசு ஆணையில் வரையறுக்கப்படவில்லை என்ற கருத்தை தெரிவித்து சிறப்பு பிரிவுகளை தோற்றுவித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.
ஆனால், உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை சரியாக புரிந்துகொள்ளாமல் நிலஅபகரிப்பு வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது என்ற ஒரு தவறான கருத்தை திணிக்க முற்படுகின்றனர். நீதிமன்ற உத்தரவின்படி, நிலஅபகரிப்பு புகார்களை விசாரிப்பதற்கென நியமிக்கப்பட்ட தனிப்பிரிவுகள், தொடர்ந்து அவ்வாறு தனிப்பிரிவுகளாக செயல்பட இயலாது என்பது மட்டும்தான் இந்த தீர்ப்பின் பொருள்.
நிலஅபகரிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு நில உரிமை யாளர்களிடம் ஒப்படைக்கப்பட்ட ரூ.2,354 கோடி மதிப்புள்ள நிலங்கள் மற்றும் வீட்டுமனைகளை மீண்டும் நிலஅபகரிப்பாளர்களே அபகரித்துக் கொள்ளலாம் என நினைத்தால் அது சரியல்ல. உயர் நீதிமன்றத்தின் ஆணை இதுவரை அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை செல்லாததாக ஆக்கிவிடவில்லை.
உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு விடுப்பு மனு கடந்த 17-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.