

புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலை தோல் தொழிற்சாலை பெண் ஊழியர்கள் நேற்று முற்றுகையிட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தபோது வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடைபெற்றது.
புதுச்சேரி அருகே ஒதியம்பட்டில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில், 400 பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். தொழிலாளர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதால் மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும்’ என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். சட்டப்பேரவையில் முற்றுகை போராட்டம் நடத்தி முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினர். பின்னர், தொழிலாளர் நலத் துறை ஆணையர் மூலம் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்றது.
இந்த நிலையில், நேற்று காலையில் 300க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள், புதுச்சேரி கடற்கரை சாலை பகுதிக்கு வந்தனர். அங்கு, தாங்கள் பணிபுரி யும் தோல் தொழிற்சாலையின் உரிமையாளருக்கு சொந்தமான ஓட்டலை முற்றுகையிட்டனர். உடனே, பெரியகடை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஜிந்தா கோதண்டராமன், சப் இன்ஸ் பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, ‘கடந்த ஒரு மாதத்துக்கு மேல் வேலையில்லாமல் போராடியும், தொழிற்சாலை உரிமையாளர் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. புதிய ஆட்கள் மூலம் பணிகள் நடைபெறுகிறது. எனவே, இங்கு வந்து போராடுகிறோம்’ என்று அந்த பெண்கள் தெரிவித்தனர். தொடர் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் எஸ்பி ரவிக்குமார் உத்தரவின்பேரில், முற்றுகையிட்ட பெண்களை போலீஸார் கைது செய்ய முயன்றனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், 200க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.