

எல்லை தாண்டியதாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு, இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பிறகும் தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் நாகை மீனவர்கள் 31 பேர், தங்களை மீட்கக் கோரி சோகத்துடன் உறவினர்களுக்கு வீடியோ அனுப்பியுள்ளனர்.
நாகை நம்பியர் நகரைச் சேர்ந்தவர் பாரி(40). இவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியன்(45), உதயகுமார்(40), ஆகாஷ்(25) உள்ளிட்ட 10 மீனவர்கள், அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த ஆனந்தகுமார்(42) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவர் மற்றும் விஜயகுமார்(35), தமிழ்ச்செல்வன்(30), இளங்கோவன்(50), கணேசன்(40), சபரிநாதன்(19) உள்ளிட்ட 10 மீனவர்கள் அக்.30-ம் தேதியும், நாகை அக்கரைபேட்டை வடக்கு தெருவைச் சேர்ந்த ராஜா(54) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ராஜா மற்றும் க.ராஜா(58), செல்வமணி(31), ரவி(60) உள்ளிட்ட 10 மீனவர்கள் அக்.31-ம் தேதியும் மீன்பிடிக்க சென்றிருந்தனர்.
இவர்கள் நவ.3-ம் தேதி கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இந்த 3 விசைப்படகுகளில் இருந்த 31 மீனவர்களை கைது செய்து இலங்கை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், நவ.17-ம் தேதி இலங்கை பருத்தித்துறை நீதிமன்றத்தால் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து, மீனவர்கள் 31 பேரும் விரைவில் நாடு திரும்புவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது வரை அவர்கள் இலங்கையில் இருந்து இந்தியா அழைத்து வரப்படவில்லை. இதனால், மீனவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில், தங்களை மீட்டு, தாயகம் கொண்டு செல்ல இந்திய தூதரகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி, மீனவர்கள் இலங்கையில் இருந்து வீடியோ பதிவுகளை நாகையில் உள்ள அவர்களது உறவினர்களுக்கு அனுப்பி உள்ளனர்.
அந்த வீடியோ பதிவுகளில், "நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட நிலையில் தற்போது வரை இலங்கை தூதரகத்துக்கு சொந்தமான இடத்தில் தங்கியுள்ளோம். 2 வாரங்களுக்கு மேலாகியும் எங்களை தாயகம் அழைத்துச் செல்ல இந்திய தூதரகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சிறையில் இருந்ததை விட, அதிக நாட்கள் இங்குதான் கஷ்டத்தை அனுபவித்து வருகிறோம். பலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிரமப்பட்டு வருகின்றனர். சரியான உணவு, உடை, இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகிறோம். எங்களை மீட்டு, சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று சோகத்துடன் தெரிவித்துள்ளனர்.
இந்த வீடியோ பதிவுகளை பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்களின் குடும்பத்தினர் கூறும்போது, "இலங்கையில் உள்ள எங்கள் சொந்தங்களை உடனடியாக மீட்டு, தாயகம் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசுக்கு பரிந்துரை: இது குறித்து நாகை மாவட்ட மீன்வளத் துறையினர் கூறும்போது, "நாகை மீனவர்களை மீட்டு தாயகம் கொண்டுவர ஆட்சியர் மூலம் தமிழக அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளோம். டிட்வா புயலால் இலங்கையில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருவதால், நாகை மீனவர்களை மீட்க காலதாமதமாகிறது. விரைவில் மீனவர்கள் மீட்கப்பட்டு, சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.