Published : 03 Feb 2015 08:51 AM
Last Updated : 03 Feb 2015 08:51 AM

முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி: எல்பிஜி டேங்கர் லாரி ஸ்டிரைக் நீடிப்பு - நாமக்கல்லில் இன்று முக்கிய முடிவு

சென்னையில் நடத்தப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் 4-வது நாளாக இன்றும் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாடகை உயர்வு கோரி, தென்னிந்திய எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள், கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். 3-வது நாளாக நேற்றும் வேலைநிறுத்தம் நீடித்தது. இந்நிலையில், சென்னை எழிலகத்தில் மாநில உணவு வழங்கல் துறை ஆணையர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.

இதில் தென்னிந்திய எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் நடராஜன், செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட 18 பேரும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் ஐஒசி நிறுவன தென்மண்டல வர்த்தக பிரிவு செயல் இயக்குநர் மண்ணூர் தலைமையிலான 6 அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

புதிய ஒப்பந்தத்தின் அடிப்படை யில் டன் ஒன்றுக்கு கிலோ மீட்டருக்கு ரூ.3.06 தர வேண்டும் என லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தினர். இதை எண்ணெய் நிறுவன அதிகாரிகள் ஏற்கவில்லை. இதனால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளாததால், வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என டேங்கர் லாரி உரிமையாளர்கள் தெரிவித் துள்ளனர். இதுதொடர்பாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நடராஜன் மற்றும் செயலாளர் கார்த்திக் ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. எங்கள் கோரிக்கை குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்ட குழுவை பேச்சுவார்த்தைக்கு எண்ணெய் நிறுவனங்கள் அனுப்பவில்லை. மண்டல அளவிலான அதிகாரிகளால் எங்களின் கோரிக்கை குறித்து முடிவு செய்ய முடியவில்லை. இதன்காரணமாக பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால், வேலைநிறுத்தத்தை தொடர்கிறோம்.

நாமக்கல் மாவட்டத்தில் சங்கத்தின் பொதுக்குழு நாளை (இன்று) நடக்கிறது. அதில் அடுத்தகட்ட முடிவுகள் குறித்து ஆலோசனை செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இன்று 4-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் நீடிக்கிறது. மொத்தமுள்ள 3,250 எல்பிஜி டேங்கர் லாரிகளும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.

சமையலுக்கான எரிவாயு சேமிப்பு

டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து முன்னேற்பாடாக, காஸ் நிரப்பும் மையங்களில் அடுத்த 10 நாட்களுக்கான சமையல் எரிவாயு சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால், காஸ் சிலிண்டர் சப்ளையில் தட்டுப்பாடு ஏற்படாது என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து ஐஒசி அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் மையங்களில் தேவையான அளவு சமையல் எரிவாயு சேமிக்கப்பட்டுள்ளது. இதனால், சிலிண்டர்களில் காஸ் நிரப்பும் பணியில் ஒரு வாரத்துக்கு பாதிப்பு ஏற்படாது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x