தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 94 அஞ்சல் அலுவலகங்களில் ஏடிஎம் மையங்கள்: சென்னை மண்டல அஞ்சல் துறை தலைவர் தகவல்
புதுவை தலைமை அஞ்சல் அலுவலகத்தில், பெண் குழந் தைகளுக்காக பிரத்யேகமாக அறிவிக்கப் பட்டுள்ள செல்வமகள் சேமிப்பு கணக்குத் திட்டத்தின் தொடக்க விழா நேற்று நடை பெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் கலந்து கொண்டு திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அதன் பிறகு, செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:
செல்வமகள் சேமிப்பு கணக்கு புதிய திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெற்றோர் 1,000 ருபாய் செலுத்தி கணக்குத் தொடங்கலாம். அதிக அளவாக ரூ.1.50 லட்சம் வரை ஒரு நிதியாண்டில் செலுத்தலாம். 21 ஆண்டு முடிந்த பிறகு கணக்கை முடித்து கொள்ளலாம். மேலும், விருப்பத்தின் பேரில் மாதாந்திர வட்டியும் பெறலாம். கணக்குத் தொடங்கியதில் இருந்து 14 ஆண்டுகள் பணம் செலுத்தலாம். இதற்கு வருமான வரி விலக்கு உண்டு. பெண் குழந்தையின் 18-வது வயதுக்குப் பிறகு 50 சதவீதம் வைப்புத் தொகையை உயர் கல்விக்காகவும், திருமணத் துக்காகவும் இந்தக் கணக்கில் இருந்து பெறலாம்.
சென்னையில் தி.நகரில் மட்டும் தற்போது அஞ்சல்துறை ஏடிஎம் மையம் இருக்கிறது. இன்னும் 3 மாதத்துக்குள் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் உள்ள 94 தலைமை அஞ்சல் அலுவலகங்களிலும் ஏடிஎம் மையங்கள் திறக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்ற முதல் நாளில் புதுவையில் ஏராளமான பொது மக்கள் பங்கேற்று, செல்வமகள் சேமிப்புக் கணக்கைத் தொடங்கினர்.
