Published : 22 Feb 2015 11:17 AM
Last Updated : 22 Feb 2015 11:17 AM

நாடு முழுவதும் 2-வது தவணை போலியோ முகாம்

நாடு முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் முகாம் 2-வது தவணையாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொடு மருந்து கொடுக்கப்படுகிறது.

இந்தியாவில் போலியோவை முற்றிலும் ஒழிக்க 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் இரண்டு தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 18-ம் தேதி நடந்தது. இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் நாடு முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

2-வது தவணையாக போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தொடங்கியது. இதற்காக தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் என 43,051 இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வெளியூர்களுக்கு செல்லும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் 1,652 நகரும் மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க 1,000 நடமாடும் குழுக்களும் செயல்படுகின்றன.

குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 2 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போலியோ சொட்டு மருந்து முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

காய்ச்சல், இருமலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு...

காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு டாக்டர்களின் ஆலோசனைப்படிதான் போலியோ சொட்டு மருந்து வழங்கவேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநர் (டிபிஎச்) டாக்டர் எஸ்.இளங்கோ கூறியுள்ளார்.

பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இதற்கிடையில் தமிழகம், ஆந்திரம், டெல்லி, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பன்றிக்காய்ச்சலால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதனால் காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கலாமா? என்ற சந்தேகம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

இதுபற்றி தமிழக பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநரும், இந்திய பொது சுகாதார சங்கத்தின் தமிழக தலைவருமான டாக்டர் எஸ்.இளங்கோ கூறியதாவது:

காய்ச்சலுக்கும் போலியோ சொட்டு மருந்துக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. 5 வயதுக்குட்பட்ட எல்லா குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்தை கண்டிப்பாக கொடுக்க வேண்டும். ஆனால் அதிகப்படியான காய்ச்சல், சளி, இருமல், நிமோனியா காய்ச்சல், மூளைக்காய்ச்சல், பிறவி குறைபாடு, தொற்றுநோய்கள் மற்றும் மிகவும் ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு டாக்டர்களின் ஆலோசனைப்படிதான் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும்.

இந்த குழந்தைகளை சாதாரண சுகாதாரப் பணியாளர்களிடம் அழைத்துச் சென்று போலியோ சொட்டு மருந்து போடக்கூடாது. இதன் மூலம் தேவையில்லாத வதந்தி மற்றும் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் கடந்த மாதம் 18-ம் தேதி முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 66 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. விடுபட்ட குழந்தைகளுக்கு சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று போலியோ சொட்டு மருந்து கொடுத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x