

கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியிலிருந்து 6 பேர் நீக்கப்பட்ட விஷயத்தில் கட்சியின் அகில இந்திய தலைமை தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கடந்த ஜனவரி மாதம் காங்கிரஸை விட்டு விலகினார். அப்போது இதுபற்றி கருத்து கூறிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், இன்னொருவரும் தனது வாரிசுடன் கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்றார். இதனால் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் அவர் மீது கோபம் கொண்டனர். இந்நிலையில் கடந்த மாதம் கோவை சென்றிருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் காரை ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் சிலர் வழிமறித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக செல்வம், வி.திருமூர்த்தி, காட்டூர் சோமு, ஏ.எம்.ரபீக், சீனிவாசன், ஹரிகரன் ஆகியோரை கட்சியிலிருந்து நீக்குவதாக கோவை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மனோகரன் அறிவித்தார். இதற்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ப.சிதம்பரம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள னர். விளக்கம் கேட்காமலும், விசாரணை நடத்தாமலும், ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் ஒப்புதலை பெறாமலும் உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்க முடியாது. எனவே, இந்த நடவடிக்கையை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.