Published : 26 Feb 2015 06:55 PM
Last Updated : 26 Feb 2015 06:55 PM

நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் பிரதமர் பின்வாங்காதது சரியான முடிவல்ல: கருணாநிதி

நாடாளுமன்றத்தில் நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்த மசோதா பிரச்சினையில் பிரதமர், பின்வாங்க மாட்டோம் என்று கூறியிருப்பது சரியான முடிவில்லை என்பதே என் கருத்து என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கேள்வி பதில் வடிவில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், '' எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்களையும் மீறி பாஜக அரசு நிலம் கையகப்படுத்தும் மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தது வேண்டாத வம்பை விலைக்கு வாங்குகிறது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது

மக்களவையில் பலம் இருப்பதால் மசோதாவை அரசு தாக்கல் செய்து விட்டது. ஆனால் மாநிலங்களவையில் இதனைத் தாக்கல் செய்யும் போது விவாதத்துக்கு அனுமதிக்க நேரிடும். இந்த மசோதாவில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை பிரதமர் நரேந்திர மோடி மறுத்து விட்டார்.

இந்த நிலம் கையகப்படுத் தும் சட்டம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்திலேயே 2013ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதன்படி விவசாய நிலத்தை கையகப் படுத்தும் முன் எண்பது சதவிகித விவசாயிகளின் ஒப்புதல் பெற வேண்டும் என்று உள்ளது. மேலும் நிலத்தைக் கையகப்படுத்தும்போது, அந்த நிலம் விவசாயம் செய்வதற்குத் தகுதி வாய்ந்த நிலமா என்பது கவனிக்கப்படவேண்டுமென்று முன்பிருந்த சட்டத்தில் கூறப்பட்டிருந்தது.

இப்போது கொண்டு வரப்படும் அவசரச் சட்டத்தில், குறிப்பிட்ட ஐந்து அமைப்புகளுக்கு நிலத்தைக் கையகப்படுத்தும் போது, அந்த நிலம் விவசாயம் செய்கின்ற நிலமா என்பதைப் பார்க்கத் தேவையில்லை என்று உள்ளது. இந்த முடிவு பாஜ.க. அரசு விவசாயிகளுக்கு எதிராகவும், தொழிலதிபர்களுக்கும், பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கும் ஆதரவாகவும் செயல்படுகிறது என்பதை நிச்சயமாக உறுதி செய்து விடும். எந்தத் திட்டத்திற்காக நிலம் கையகப் படுத்தப்படுகிறதோ, அந்தத் திட்டம் ஐந்தாண்டு களில் நிறைவேற்றப்படாவிட்டால், அந்த நிலத்தை விவசாயிகளுக்கே திரும்பத் தந்து விட வேண்டும் என்பது முந்தைய சட்டத்தில் உள்ளது. அவசரச் சட்டத்தில் இந்தப் பிரிவும் நீக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க.வின் இந்தச் செயலுக்கு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பாஜக வின் தோழமைக் கட்சிகளேகூட இந்த முடிவினை ஏற்கவில்லை. மத்திய அரசு இந்த அவசரச் சட்டம் உட்பட மேலும் பல அவசரச் சட்டங்களுக்கும் நாடாளுமன்றத்தில் அனுமதி பெற வேண்டிய நிலையில் உள்ளது. இந்தத் தொடருக்குள் நிறைவேற்றாவிட்டால், அவசரச் சட்டம் காலாவதி ஆகிவிடும்.

நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டத் திருத்த மசோதாவுக்கு காங்கிரஸ், சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன. ஆனாலும் இந்தப் பிரச்சினையில் பிரதமர், பின்வாங்க மாட்டோம் என்று கூறியிருப்பது சரியான முடிவில்லை என்பதே என் கருத்து.

சொந்த நிலத்தின் மீது விவசாயிகளுக்குள்ள அடிப்படை உரிமையைப் பாதுகாத்திடத் தவறினால், விபரீதமான விளைவு களைச்சந்திக்க நேரிடும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.'' என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x