பருப்பு, எண்ணெய் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்குமா?

பருப்பு, எண்ணெய் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்குமா?
Updated on
1 min read

மத்திய பட்ஜெட்டில் பருப்பு, எண்ணெய் இறக்குமதிக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என வியாபாரிகள், வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

உலக அளவில் சுமார் 60 மில்லியன் டன் பருப்பு வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில், இந்தியாவில் மட்டும் சுமார் 17 மில்லியன் டன் பருப்பு வகைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து பாகிஸ்தான், கனடா, பர்மா, ஆஸ்திரேலியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளுக்கும் பருப்பு வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. தற்போது பருப்பு வகைகள் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மானாவாரி பயிரான பருப்பு வகைகள், குறைந்த செலவில் விவசாயிகளுக்கு அதிக லாபம் தரக்கூடியதாக இருந்தாலும் அவ்வப்போது ஏறி, இறங்கும் விலையால் உரிய விலை கிடைக்காமல் விவசாயிகளும், பருப்பு வகைகள் சில நேரங்களில் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதால் வியாபாரிகளும் பாதிக்கப்படு கின்றனர்.

விருதுநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான பருப்பு, எண்ணெய் ஆலைகள் இயங்கி வருகின்றன. தேசிய அளவில் பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் உற்பத்தியிலும், விலை நிர்ணயத்திலும் விருதுநகர் சந்தை முக்கிய பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மத்திய அரசின் பட்ஜெட் தொடர்பாக விருதுநகர் வியாபார தொழில் துறை சங்கத் தலைவர் வி.வி.எஸ்.யோகன் கூறியதாவது:

பருப்பு, எண்ணெய் வகைகள் இறக்குமதிக்கான வரைமுறைகளும், கட்டுப்பாடு களும் அதிகப்படுத்த வேண்டும். சீனாவைப் போன்று பருப்பு வகைகள் விளைச்சல் இருக்கும் காலங்களில் இறக்குமதியைக் குறைக்கும் வகையிலும், விளைச்சல் இல்லாத காலங்களில் இறக்குமதியை சற்று அதிகரிக்கும் வகையிலும் புதிய கொள்கைகள், கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்றார்.

விருதுநகர் அனைத்து வியாபாரிகள் சங்கச் செயலர் கே.எம்.ஆர்.கார்த்திகேயன் கூறிய போது, தாராள இறக்குமதியால் உள்நாட்டில் பருப்பு வகைகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. இதனால், வியாபாரிகள் மட்டுமின்றி விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர்.

வங்கியில் கடன் வாங்கி முதலீடு செய்யும் வியாபாரிகளுக்கு ஆண்டுக்கு 13.5 முதல் 15 சதவிகிதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. உரிய காலத்தில் கடனை திருப்பிச் செலுத்தும் வியாபாரிகளுக்கு வட்டித் தொகையில் 2 முதல் 5 சதவீதத்தை திருப்பிக் கொடுக்கும் வகையில் பட்ஜெட்டில் சலுகைகள் கொண்டுவரப்பட்டால் வர்த்தகர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in