

சர்ச்சைக்குள்ளான `மாதொருபாகன்’ நாவல் ஆசிரியர் பெருமாள்முருகன் மற்றும் அவரது மனைவி ஆகியோரை நாமக்கல்லில் இருந்து சென்னையில் உள்ள அரசுக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்ய உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில், சென்னை அரசு கல்லூரிகளில் உள்ள காலியிடம் பற்றி ஆராயப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் உறுதி அளித்தார்.
இது தொடர்பாக மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் பொதுச் செயலாளரும், வழக்கறிஞருமான எஸ்.பாலமுருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்:
சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதியதாக `மாதொருபாகன்’ நாவல் ஆசிரியர் பெருமாள்முருகனை நிர்ப்பந்தித்து நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் கோட்டாட்சியர் முன்னிலையில் அண்மையில் நடந்த அமைதிக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு சட்டவிரோதமானது என்பதால், அதனை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.
பெருமாள்முருகனுக்கு தொடர்ந்து தொலைபேசி மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. அதனால் அவரும், அவரது குடும்பத்தினரும் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத சூழல் நீடிக்கிறது. ஆகவே, அவர்களது பாதுகாப்பு கருதி, நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றும் இணைப் பேராசிரியர் பெருமாள் முருகன் மற்றும் அவரது மனைவியும் உதவிப் பேராசிரியருமான எழிலரசி ஆகியோரை சென்னையில் உள்ள ஏதாவதொரு அரசு கல்லூரிக்கு இடமாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி பெருமாள்முருகன் கடந்த மாதம் 23-ம் தேதி சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கொடுத்த விண்ணப்பத்தை பரிசீலிக்கவும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் ஆகியோர் இந்த மனுவை நேற்று விசாரித்து பிறப்பித்து உத்தரவு:
இந்த வழக்கில், மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், அரசு ஊழியர் களான பெருமாள்முருகன் மற்றும் அவரது மனைவி எழிலரசி ஆகியோரது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சென்னையில் உள்ள ஏதாவது ஓர் அரசு கல்லூரியில் காலியாக உள்ள இடத்தில் அவர்களை பணியமர்த்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அரசு வழக்கறிஞர் மூர்த்தி வாதிடுகையில், சென்னை அரசு கல்லூரிகளில் உள்ள காலியிடம் பற்றி ஆராயப்படும் என்றார். இதையடுத்து இவ்வழக்கு, ஏற்கெனவே தொடரப்பட்ட வழக்குகளுடன் சேர்த்து விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.