

தருமபுரி மாவட்ட மதிமுக முன்னாள் செயலாளர் வி.எஸ்.சம்பத் சென்ற காரின் டயர் திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பத் மற்றும் கார் ஓட்டுநர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
தருமபுரி மாவட்டம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த மதிமுக முன்னாள் செயாலளர் வி.எஸ்.சம்பத்(52). தற்போது, இவர் மாநில தலைமை அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் . சம்பத்தும், தருமபுரியைச் சேர்ந்த மதிமுக நிர்வாகிகள் தருமன்(50), முருகன்(42), ஜோதி (41) ஆகியோர் காரில் சேலம் நோக்கிச் சென்றனர் . கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியைச் சேர்ந்த மாது(45) காரை ஓட்டி வந்துள்ளார்.
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகேயுள்ள தளவாய்ப்பட்டி என்ற இடத்தில் கார் சென்ற போது, திடீரென டயர் வெடித்ததில், தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மதிமுக நிர்வாகி வி.எஸ். சம்பத் , கார் ஓட்டுநர் மாது இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த, ஓமலூர் டிஎஸ்பி உதயகுமார் மற்றும் போலீஸார் சம்பவ இடத் துக்குச் சென்று, படுகாயமடைந்த மூவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.