

தாது மணல் ஆய்வு தொடர்பான அறிக்கை குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்.
சட்டப்பேரவையில் வியாழக்கிழமை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதம் வருமாறு:
எஸ்.எஸ்.சிவசங்கர் (திமுக): கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாது மணல் எடுக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் பி.தங்கமணி: கடந்த 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் 17 நிறுவனங்களுக்கு தாது மணல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின் (திமுக): தாது மணல் தொடர்பாக அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார். ஆனால், அந்தக் குழுவின் அறிக்கை இன்னமும் வெளியிடப்படவில்லை. சட்டப்பேரவையிலும் சமர்ப்பிக்கப்படவில்லை.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: கார்னெட் மற்றும் அவற்றுடன் கலந்துள்ள கனிமங்களை எடுக்க திருச்சி மாவட்டத்தில் 11, மதுரை மாவட்டத்தில் 2, தூத்துக்குடி மாவட்டத்தில் 6, திருநெல்வேலி மாவட்டத்தில் 53, கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 என மொத்தம் 81 கனிம குத்தகை உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தனது 6.8.2013 தேதியிட்ட கடிதத்தில் கார்னெட், இல்மனைட், ரூட்டைல், மோனோசைட் உள்ளிட்ட கனிமங்களின் தனித்தன்மை மற்றும் விலைமதிப்பு ஆகியவற்றை கருத்தில்கொண்டு முறைகேடாக இக்கனிமங்களை வெட்டியெடுப்பது தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொள்ளலாம் என தெரிவித்திருந்தார். அவரது வேண்டுகோளுக்கு இணங்க, புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் தனது பரிந்துரையை அரசுக்கு அனுப்பியிருந்தார்.
அதை பரிசீலித்த அரசு, வருவாய்த்துறை செயலரின் தலைமையில் ஒரு சிறப்புக் குழுவை அமைத்து தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள 6 தாது மணல் சுரங்க குத்தகைகளையும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என ஆணையிட்டது. மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் தாது மணல் சுரங்க குத்தகை நடவடிக்கைகளை முழுவதுமாக நிறுத்திவைக்கவும், சிறப்புக் குழுவானது ஒரு மாதத்துக்குள் அறிக்கையை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதன்படி, சிறப்புக் குழுவானது, தூத்துக்குடி மாவட்டத்தில் தனது களப்பணியை 17.9.2013 அன்று முடித்தது.
புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையரின் பரிந்துரைப்படி, மேற்கண்ட சிறப்பு குழுவே, நெல்லை, திருச்சி, கன்னியாகுமரி, மதுரை மாவட்டங்களிலும் சுரங்க குத்தகை பகுதிகளை ஆய்வு செய்து அரசுக்கு விரைவாக அறிக்கை அளிக்கவும் இந்த மாவட்டங்களில் இயங்கி வரும் தாதுமணல் குவாரிகளின் செயல்பாட்டினை நிறுத்திவைக்கவும் அரசு ஆணையிட்டது.
திமுகவினர் குறிப்பிடும் ககன்தீப் சிங் அறிக்கை, தூத்துக்குடி மாவட்டம் பற்றியது. நீதிமன்ற ஆணைகளின் காரணமாக, மற்ற மாவட்டங்களில் ஆய்வு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. முழுமையான அறிக்கை பெற்ற பிறகே அதை ஆய்வு செய்து முடிவெடுக்க இயலும் இவ்வாறு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.