Published : 25 Feb 2015 04:44 PM
Last Updated : 25 Feb 2015 05:52 PM
நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி வளாகம் நேற்று திருவிழா கோலம் பூண்டிருந்தது. பலவித ரகங்களில் பல்வேறு வண்ணத்தில் கைத்தறி சேலை கட்டியபடி மாணவிகள் கல்லூரிக்குள் வலம் வந்தனர்.
கல்லூரி விரிவுரையாளர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் சேலை உடுத்தி வந்திருந்தனர். கைத்தறி நெசவுத் தொழிலை ஊக்குவிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சேலை அணிந்து வந்ததாக மாணவிகள் தெரிவித்தனர். இவர்களுக்கு இந்த விழிப்புணர்வை ஏற்படுத்திய பெருமை தமிழக அரசின் கோஆப்டெக்ஸ் நிறுவனத்தையே சேரும்.
கோ ஆப்டெக்ஸ் முயற்சி
நெசவுத் தொழில் செய்பவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்ற உயரிய குறிக்கோளோடு கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் அனைத்து கல்லூரிகளுக்கும் சென்று, கைத்தறி சேலைகளை தள்ளுபடி விலையில் விற்பனை செய்து வருகிறது. இதன் மூலம், நெசவாளர்கள் உற்பத்தி செய்த சேலைகள் எளிதில் விற்றுத்தீர்ந்து விடுகின்றன. அவர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது.
கன்னியாகுமரியில் செயல்படும் கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் சார்பில், இந்த ஆண்டு முதன் முதலில் சுங்கான்கடையில் உள்ள ஐயப்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கைத்தறி சேலை விற்பனை நடைபெற்றது.
2 ஆயிரம் சேலைகள்
இரண்டாம் கட்டமாக நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் 25 சதவீத தள்ளுபடி விலையில் சேலைகள் விற்பனை செய்யப்பட்டன. இக்கல்லூரியில் 2 ஆயிரம் கைத்தறி சேலைகள் விற்பனையானது. அதைத் தொடர்ந்து, நேற்று கல்லூரி மாணவிகள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் கைத்தறி சேலையை அணிந்து வந்திருந்தனர்.
வழக்கமாக சுடிதாரில் வலம் வரும் மாணவிகள், நேற்று சேலை அணிந்திருந்தால் உற்சாகத்துடன் காணப்பட்டனர். சக தோழிகளுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
மாணவி அக்ஷ்ருதி கூறும் போது, “எங்கள் கல்லூரியின் சீருடை சுடிதார்தான். விசேஷங் களுக்கு செல்லும்போது கூட சுடிதார்தான் அணிவேன். முதன் முதலாக நமது கலாச்சார உடையான சேலையை அணிந்ததும் தன்னம்பிக்கை அதிகரித் துள்ளதை உணர்கிறேன்” என்றார்.