

தொழில் வர்த்தக சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த இரண்டு நாள் ‘ஸ்பெக்ட்ரம் 2015’ மாநாடு சென்னையில் நடைபெற்றது.
இந்திய பொருட்கள் மேலாண்மை கல்வி நிறுவனம் சார்பில் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்த இந்த 2 நாள் மாநாட்டில் ‘சர்வதேச போட்டித்தன்மைக்கான வருங்கால விநியோக தொடர்’ என்ற கருத்தின் அடிப்படையில் தொழில் மற்றும் வர்த்தகத் துறையை சேர்ந்த வல்லுநர்கள் சிறப்புரையாற்றினர்.
இந்த மாநாடு தொடர்பாக இந்திய பொருட்கள் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் சென்னை பிரிவு தலைவர் டி.ஏ.பி.பாரதி ‘தி இந்து’விடம் கூறியதாவது:
‘ஸ்பெக்ட்ரம்’ என்ற தலைப்பில் ஆண்டுதோறும் நாங்கள் மாநாடு நடத்தி வருகிறோம். தொழில் வர்த்தக முறை, சரக்கு விநியோகம் ஆகியவற்றில் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து துறை சார்ந்த வல்லுநர்கள் மூலம் விவாதிப்பது தான் இந்த மாநாட்டின் நோக்கம். மாநாட்டின் முதல் நாளில் ஐடிசி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சந்த் தாஸ், சென்னை ஐஐடியின் மேலாண்மை துறை பேராசிரியர் டி.டி.நரேந்திரன், வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின் வர்த்தக வாகனப் பிரிவு தலைவர் ராஜாராமன், ஒ.என்.ஜி.சி. மங்களூர் பெட்ரொகெமிக்கல்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இரண்டாம் நாளில் சென்னை சர்வதேச முனையம் நிறுவனத்தின் தலைமை விற்பனை அதிகாரி சுஷ்மிதா ஆனந்த், அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் நிதித்துறை துணை தலைவர் வி.வேணுகோபால், தென்னக ரயில்வே தலைமை இயக்க மேலாளர் எஸ்.ஆனந்தராமன் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த வல்லுநர்கள் பங்கேற்று பேசினார்கள்.
இந்த மாநாட்டின் மூலம் இன்றைக்கு வர்த்தகம் மற்றும் சரக்கு விநியோகத்தில் உள்ள சவால்களை தீர்ப்பதற்காக இந்திய அரசுக்கு பல்வேறு பரிந்துரைகள் அளிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.