Published : 19 Feb 2015 09:12 PM
Last Updated : 19 Feb 2015 09:12 PM

பொறியியல் கல்லூரிகளில் 1.25 லட்சம் காலியிடங்கள்: அமைச்சர்

பொறியியல் கல்லூரிகளில் 1.25 லட்சம் காலியிடங்கள் உள்ளன என்று சட்டப்பேரவையில் அமைச்சர் பி.பழனியப்பன் தெரிவித்தார்.

பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது அதிமுக உறுப்பினர் சு.மாதேஸ்வரன் (ஆத்தூர் தொகுதி) எழுப்பிய கேள்விக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் பதில் அளிக்கையில், "தமிழகத்தில் அரசு பொறியியல் கல்லூரிகள் 10, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் 3, சுயநிதி பொறியியல் கல்லூரிகள் 546, அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள் 18 ஆக மொத்தம் 577 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் உள்ள 2,92,042 இடங்களில், 1,67,082 இடங்களில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

இதுபோக 1,25,160 இடங்கள் காலியாக உள்ளன. புதிதாக ஒரு பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டுமென்றால் ரூ.100 கோடி செலவாகும். சேலம் மாவட்டத்தில் மட்டும் 22 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அங்குள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 50-க்கும் மேற்பட்ட இடம் காலியாகவுள்ளது. எனவே, ஆத்தூர் தொகுதியில் பொறியியல் கல்லூரி அமைப்பது அரசின் பரிசீலனையில் இல்லை" என்றார் அமைச்சர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x