Last Updated : 07 Feb, 2015 02:33 PM

 

Published : 07 Feb 2015 02:33 PM
Last Updated : 07 Feb 2015 02:33 PM

ஏன் தெரியுமா? - பற்களின் நிறம் மாறுவது ஏன்?

மற்றவர்களைப் பார்த்து புன்னகை புரியும்போது பற்கள் பளிச்சிட வேண்டும் என்று விரும்பாதவர்கள் உண்டா? முகத்துக்கு ஃபேசியல், பிளீச்சிங் என்று செயற்கை முறையில் அழகூட்டுவதைப் போல மஞ்சளான பற்களுக்கு அழகூட்ட பலரும் பல் மருத்துவமனைகளிலும், அழகு நிலையங்களிலும் வரிசைகட்டி காத்திருக்கிறார்கள்.

பல்லுக்கு நிறம் தருவது எது?

நம் ஒவ்வொரு பல்லிலும் வெளியில் தெரிகிற பகுதிக்கு ‘எனா மல்’ என்று பெயர். இதற்கு அடுத்த பகுதியாக இருப்பது ‘டென்டின்’ (Dentin). ஒருவருக்கு டென்டின் எந்த நிறத்தில் அமைகிறதோ அந்த நிறம் தான் அவருடைய பற்களின் நிறம்.

பொதுவாக, எல்லோருக்கும் சர்க்கரை மாதிரி பற்கள் வெள்ளையாக இருக்காது; முத்துப் போன்ற வெண்மை, வெளிர் மஞ்சள், சந்தன நிறம் என பற்களுக்கு இயற்கையிலேயே பல நிறங்கள் உண்டு. பல் முளைக்கும்போது வெள்ளை நிறத்தில் இருக்கின்ற பற்கள். வயது ஆக ஆக அந்தப் பொலிவு குறைந்து கொஞ்சம் மஞ்சள் நிறத்துக்கு மாறும். எனாமல் எனும் வெளிப்பூச்சு தேய்ந்து `டென்டின்’ எனும் உள்பகுதி வெளியில் தெரியத் தொடங்குவதே முதுமையில் ஏற்படுகிற பல்லின் நிறமாற்றத்துக்கு அடிப்படைக் காரணம். ஆனால், பலருக்கும் இளமையிலேயே பற்களின் நிறம் மாறிவிடுகிறதே, ஏன்? அதற்கான காரணங்களை இப்போது பார்ப்போம்.

பற்கள் நிறமிழப்பது ஏன்?

பற்களைச் சுத்தமாகப் பராமரிக்கத் தவறுவது பற்களின் நிறமாற்றத்துக்கு முக்கியக் காரணம். எனாமலில் பற்காரை படிவதால் பல்லின் நிறம் மாறுகிறது. புகைப்பழக்கம், வெற்றிலை, பாக்கு, புகையிலை போடுவது, பான்மசாலா/குட்காவைப் பயன்படுத்துவது போன்ற பழக்கங்கள் உள்ளவர்களுக்கு பற்களின் நிறம் காவி நிறத்துக்கு மாறும். காரணம், புகையிலையில் உள்ள நிகோடின் ரசாயனத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக டென்டின் உறிஞ்சிக்கொண்டே இருக்கும். நாளடைவில் தன் இயல்பான நிறத்தை அது இழந்துவிடும்.

இனிப்புப் பண்டங்களை அதிகம் சாப்பிடுவதும், குளிர்பானங்களை அடிக்கடி அருந்துவதும் பற்களின் நிறம் மாறுவதற்குத் துணை செய்யும். கறுப்புச் சாக்லேட்டை அதிகமாகச் சாப்பிட்டால், காபி, கறுப்புத் தேநீர், சிவப்பு ஒயின் ஆகியவற்றை அதிக அளவில் குடித்தால் விரைவிலேயே பற்களின் நிறம் மாறிவிடும்.

காபியிலும் தேநீரிலும் உள்ள ‘டானின்’ ரசாயனம், ஒயினில் உள்ள ‘பாலிபீனால்’ எனும் ரசாயனம் இந்த நிறமாற்றத்தை ஏற்படுத்துகின்றன. சோயா சாஸ், வினிகர் போன்றவற்றை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும்போதும் பற்களின் நிறம் மாறலாம். பல்லில் சொத்தை ஏற்படுவது, விபத்தில் அடிபடுவது போன்ற காரணங்களால் பற்கள் கறுப்பு நிறத்துக்கு மாறிவிடும்.

நாம் குடிக்கும் தண்ணீரிலும் பாலிலும் ஃபுளோரைடு அளவு அதிகமாக இருக்குமானால் ‘டென்டல் ஃபுளூரோசிஸ்’ ( Dental Fluorosis ) எனும் பிரச்சினை வரும். அப்போது பற்கள் அடர் மஞ்சள், காவி நிறம் எனப் பல்வேறு நிறங்களில் காணப்படும். எனாமலில் மாநிறக்கோடுகள் அல்லது வெள்ளை நிறக்கோடுகள் பட்டை போட்டதுபோல் தெரியும்.

கருவுற்ற பெண்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் தாங்களாகவே டெட்ராசைக்ளின் போன்ற ஆன்ட்டிபயாட்டிக் மாத்திரைகளைச் சாப்பிடும்போது, அவற்றின் பக்கவிளைவாக அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்குப் பற்களில் நிறமாற்றம் காணப்படும். இதுபோல் ரத்தசோகை நோய்க்கு இரும்புச் சத்து மாத்திரை மற்றும் டானிக்குகளைத் தொடர்ந்து நீண்ட நாட்களுக்குச் சாப்பிடும்போதும் பற்களின் நிறம் கறுப்பாக மாறும்.

என்ன சிகிச்சை?

புகையிலை காரணமாக கறை படிந்த பற்கள் உள்ளவர்கள், டென்டல் ஃபுளூரோசிஸ் பிரச்சினை உள்ளவர்கள், மாத்திரை மருந்துகளால் பற்களின் நிறம் மாறியவர்கள் ஆகியோருக்குப் பற்களின் மஞ்சள் நிறத்தை மாற்றி வெள்ளை நிறத்துக்குக் கொண்டு வருவதற்கு ‘டூத் ஒயிட்டனிங்’( Tooth Whitening ) எனும் சிகிச்சைமுறை தற்போது செய்யப்படுகிறது. இதை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை செய்துகொள்ள வேண்டும். அப்போதுதான் பற்களின் நிறம் வெள்ளை நிறத்தில் நிலைத்து நிற்கும். அப்படிச் செய்யும்போது ஒரு சிக்கல் உண்டாவதைத் தவிர்க்க முடியாது. அதாவது, அந்தப் பற்கள் விரைவிலேயே சிதைந்துவிடும்.

எங்கு செய்வது? யாருக்குச் செய்வது?

பற்களுக்கு அழகூட்டச் செய்யப்படும் இந்தச் சிகிச்சையை பலரும் அழகு நிலையங்களில் செய்துகொள்கிறார்கள். இன்னும் சிலர் இணையத்தில் படித்து ‘ஒயிட்டனிங் கிட்’ வாங்கித் தாங்களாகவே பற்களை அழகுபடுத்திக் கொள்கிறார்கள். இந்த இரண்டுமே தவறு. இது, பல ரசாயனங்களைப் பயன்படுத்திச் செயற்கை முறையில் செய்யப்படும் சிகிச்சை என்பதால், கடுமையான ஒவ்வாமை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புண்டு. ஆகவே, தகுதி பெற்ற பல் மருத்துவரால் மட்டுமே இந்தச் சிகிச்சையைச் செய்யமுடியும். அப்படியும் இந்தப் பிரச்சினை உள்ள எல்லோருக்கும் இதைச் செய்யமுடியாது. யாருக்கு இதைச் செய்ய வேண்டும் என்பதை பல் மருத்துவர்தான் முடிவு செய்ய வேண்டும். குறிப்பாக, கர்ப்பிணிகள் இதைச் செய்துகொள்ளக் கூடாது.

தடுக்க வழி உண்டா?

‘டூத் ஒயிட்டனிங்’ சிகிச்சைக்குப் பதிலாக ஆண்டுக்கு ஒருமுறை ‘ஸ்கேலிங்’ என்ற முறையில் பற்களைச் சுத்தப்படுத்திக்கொள்ளலாம். இதன் மூலம் பல்லில் காரை படிதல், நிறமிழத்தல் போன்ற பிரச்சினைகள் தவிர்க்கப்படும். இதற்கு ஒவ்வாமை ஏற்பட வழியில்லை. பற்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. பற்கள் எளிதாக தங்கள் இயல்பான நிறத்துக்கு மாறிவிடும்.

டென்டல் ஃபுளூரோசிஸ் பிரச்சினை உள்ளவர்கள் பல் மருத்துவர் ஆலோசனைப்படி ஃபுளூரைடு பற்பசைகளைப் பயன்படுத்த வேண்டும். குடிக்கும் தண்ணீரில் ஃபுளூரைடு தாது அதிகமாக இருந்தால், அந்தத் தண்ணீரை அப்படியே குடிக்கக் கூடாது. ஒரு லிட்டர் குடிநீரில் அலுமினியம் சல்பேட் (Alum) 12.8 கிராம், கால்சியம் ஆக்சைடு (Lime) 6.4 கிராம் கலந்து 10 நிமிடங்களுக்கு நன்கு கலக்க வேண்டும். மூன்று மணி நேரம் கழித்து அந்தத் தண்ணீரை மெல்லிய துணியில் வடிகட்டிப் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் ஓரளவுக்கு ஃபுளூரைடு தாதுவைக் குடிநீரில் குறைத்துவிடலாம். டென்டல் ஃபுளூரோசிஸ் பாதிப்பு வராமலும் பார்த்துக்கொள்ளலாம்.

புகைப்பழக்கம், புகையிலை போடுதல் இந்த இரண்டையும் கைவிட வேண்டும். குளிர்பானங்கள், கோலா பானங்கள் குடிப்பதை அவசியம் தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை அடிக்கடி சாப்பிட வேண்டாம். மது வேண்டவே வேண்டாம்.

சாக்லேட், இனிப்பு மாவு மற்றும் சர்க்கரை கலந்த இனிப்புகளைச் சாப்பிட்ட பிறகு வாயை நன்றாகக் கொப்பளியுங்கள். அல்லது காரட், ஏதாவது ஒரு பழம் சாப்பிடுங்கள். இதன் பலனாக பற்களில் ஒட்டியிருக்கிற சர்க்கரைப் படலம் எளிதாக நீங்கிவிடும். காரை படிவது தடுக்கப்படும்.

‘பளிச்’ பற்களுக்கான ஊடக விளம்பரங்களைப் பார்த்து தினமும் புதிது புதிதாக பற்பசைகளை வாங்கிப் பயன்படுத்தாதீர்கள். பல பற்பசைகளில் ‘பிளீச்சிங்’ ரசாயனங்கள்தான் உள்ளன. இவற்றால் சில நாட்களில் பற்கள் வெண்மையானதுபோல் தோன்றலாம். ஆனால், நாளடைவில் எனாமல் கரைந்து பற்கள் சேதமடையவே வாய்ப்புகள் அதிகம்.

ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டும். மிருதுவான பல்துலக்கியில் பட்டாணி அளவுக்குப் பற்பசை எடுத்துக்கொண்டு அதிகபட்சம் ஐந்து நிமிடங்களுக்குப் பல் துலக்கினால் போதும். அதிக நேரம் துலக்குவதாலோ, அழுத்தமாகத் துலக்குவதாலோ அதிக பற்பசை கொண்டு துலக்குவதாலோ பற்கள் வெள்ளை நிறத்துக்கு மாறிவிடாது. ஜெல் பற்பசை மற்றும் பல்வேறு நிறங்களில் உள்ள பற்பசைகளைப் பயன்படுத்த வேண்டாம். வெள்ளை நிறத்தில் இருக்கும் பற்பசையை மட்டுமே பயன்படுத்துங்கள். மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் நீங்களாகவே மருந்து, மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடாதீர்கள்.

ஃபுளூரைடு பற்பசை அவசியமா?

ஃபுளூரைடு தாது இருமுனைக் கத்தி போன்றது. இது உடலில் குறைந்தாலும் குற்றம். அதிகமானாலும் ஆபத்து. இது தண்ணீரிலும் இருக்கிறது; நாம் சாப்பிடும் பல உணவு வகைகளிலும் இருக்கிறது. சமச்சீரான உணவைச் சாப்பிடுவோருக்கு அவரவர் தேவைக்கேற்ப உணவிலிருந்தே இது கிடைத்துவிடும். ஆகவே, ஃபுளூரைடு கலந்த பற்பசை எல்லோருக்கும் தேவையில்லை. ஆனால், இன்றைய ஊடகங்களில் வரும் பற்பசை விளம்பரங்களோ எல்லோருக்கும் ஃபுளூரைடு பற்பசை அவசியம் என்றுதான் பாடம் நடத்துகின்றன.

உங்களுக்கு ஃபுளூரைடு பற்பசை அவசியமா, இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள ஒரு எளிய வழியைச் சொல்லலாம். உங்கள் ஊர்த் தண்ணீரில் ஃபுளூரைடு எந்த அளவில் இருக்கிறது என்பதை ஊராட்சி, நகராட்சி அல்லது மாநகராட்சி அலுவலக மருத்துவ மையத்தில் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். குடிநீரில் 1 பி.பி.எம். அளவுக்கு மேல் ஃபுளூரைடு இருந்தால் ஃபுளூரைடு பற்பசை தேவையில்லை; 0.7 பி.பி.எம். அளவுக்குக் குறைந்தால் ஃபுளூரைடு பற்பசையைப் பயன்படுத்தலாம்.

இந்தியாவைப் பொறுத்தவரை 7 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஃபுளூரைடு பற்பசை தேவையில்லை என்று உலக சுகாதார நிறுவனம் ( WHO ) அறிவுறுத்தியுள்ளது. ஃபுளூரைடு பற்பசை'யில் 700 பி.பி.எம். அளவுக்கு ஃபுளூரைடு உள்ளது. பொதுவாகவே சிறு குழந்தைகள் பற்பசையைப் பயன்படுத்தும்போது சரியாக வாயைக் கழுவ மாட்டார்கள். இதனால், பற்களில் ஃபுளூரைடு தேங்கும். மேலும், பல குழந்தைகள் பற்பசையை விழுங்கிவிடுவார்கள். இதனால் வயிற்றுக் கோளாறுகள் வரும். இந்தப் பழக்கம் நீடித்தால், இவர்களுக்கு நிலைப்பற்கள் முளைக்கும்போது ‘டென்டல் ஃபுளூரோசிஸ்’ பாதிப்பு வந்து பற்கள் நிறமிழக்கலாம். இதனைத் தவிர்க்கவே இந்த எச்சரிக்கை.

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x