Published : 25 Feb 2015 10:14 AM
Last Updated : 25 Feb 2015 10:14 AM

7-வது நாளாக வகுப்பு புறக்கணிப்பு: இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம்

கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 7-வது நாளாக நேற்று வகுப்புகளை புறக்கணித்து உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை கே.கே. நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவப் படிப்பில் 200 மாணவ, மாணவிகள் மற்றும் மருத்துவ மேற்படிப்பில் 38 மாணவ, மாணவிகளும் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் நிதிச்சுமை காரணமாக இப்போதுள்ள மாணவர்கள் படிப்பை முடிந்த பின், 11 இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளும் மூடப்படும் என்று மத்திய தொழிலாளர் நலத்துறை அறிவித்தது.

இதை எதிர்த்து கே.கே. நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் கடந்த 18-ம் தேதி முதல் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம், பேரணி, மனித சங்கிலி என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக கே.கே.நகர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அவர்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் பரபரப்பு ஏற் பட்டது.

அன்புமணி வேண்டுகோள்

சென்னை உள்ளிட்ட 11 நகரங்களில் செயல்பட்டு வரும் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி களை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் 11 கல்லூரிகள்

தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகத்தின் (இஎஸ்ஐ) சார்பில் சென்னை உட்பட நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் 11 மருத்துவக் கல்லூரிகளை நிரந்தரமாக மூட மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த முடிவை எதிர்த்து சென்னையிலுள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. சென்னை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மூடப்பட்டால், அங்கு படிக்கும் மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்புகள் பாதிக்கப் படும்.

எனவே, மாநில அரசுகளுடன் இணைந்தோ அல்லது பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்தோ இந்த மருத்துவக் கல்லூரிகளை தொடர்ந்து நடத்த வேண்டும்.

அதே போல கோவை உள்ளிட்ட நகரங்களில் கட்டப்பட்டுள்ள 10 மருத்துவக் கல்லூரிகளை உடனடியாக திறக்கவும் மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண் டும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x