

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் நண்பர் பொட்டு சுரேஷ், கடந்த 31.1.2013 அன்று கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக அட்டாக் பாண்டி உட்பட பலர் மீது போலீ ஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு அட்டாக் பாண்டி, 3-வது முறையாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், `இவ்வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த சபாரத் தினம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் என்னை வழக்கில் சேர்த்துள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள், தற் போது ஜாமீனில் வெளிவந்துவிட்ட னர். வழக்கில் குற்றப்பத்திரிகை யும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. எனவே, எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண் டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சுப்பிரமணியபுரம் ஆய்வாளர் கோட்டைச்சாமி பதில் மனு தாக்கல் செய்தார். அதில், பொட்டு சுரேஷ் கொலையில் அட்டாக் பாண்டி மூளையாகச் செயல்பட்டுள்ளார். கொலையை நேரில் பார்த்தவர்களும், கொலைக்கும் அட்டாக் பாண்டிக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
பல வழக்குகளில் அட்டாக் பாண்டி ஏற்கெனவே முன்ஜாமீன் பெற்றுள்ளார். அப்போது நீதிமன்ற நிபந்தனைகளை அவர் மதிக்கவில்லை. அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். அவரை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றமும் அறிவித்துள்ளது. அவரது சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே 3 முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இந்தத் தகவல்களை அவர் மறைத்துள்ளார். அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது, எனக் கூறப்பட்டிருந்தது. பின்னர், மனுதாரர் வழக்கறிஞர் கேட்டுக் கொண்டதன்பேரில் விசாரணையை பிப்.23-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.