ஜல்லிக்கட்டு தடையை நீக்க மத்திய அரசு சட்டத் திருத்தம்: பாஜக தேசிய செயலர் எச்.ராஜா தகவல்

ஜல்லிக்கட்டு தடையை நீக்க மத்திய அரசு சட்டத் திருத்தம்: பாஜக தேசிய செயலர் எச்.ராஜா தகவல்
Updated on
1 min read

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க சட்டத் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று பாஜக தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்தார்.

சென்னையில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

ஜல்லிக்கட்டு நடத்த தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் 2007-ல் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2011-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, பிராணிகள் வதைத் தடுப்புச் சட்டம்-1960-ல் திருத்தம் கொண்டு வந்து, காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் எருதுகளை சேர்த்தது. இதன் அடிப்படையில் கடந்த ஆண்டு மே மாதத்தில் ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தயம் நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு நடத்த முடியாததால் மதுரை, திருச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு தென் மாவட்ட கிராமங்கள் சோகத்தில் மூழ்கின.

இதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு இல்லை. தமிழர்களின் பாரம்பரியம் என்பதற்கான ஆதாரங்களைத் திரட்டினேன். பின்னர், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவிடம் கடந்த மாதம் மனு அளித்திருந்தேன். சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரையும் சந்தித்து கோரிக்கை விடுத்தேன்.

காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து எருதுகளை நீக்க சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார். அத்துறை சார்பில் எழுத்துப்பூர்வமாகவும் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தில் இந்த சட்டத் திருத்தம் நிறைவேற்றப்படும்.

தமிழக அரசு சந்தித்து வரும் நிதி பிரச்சினைகளை தீர்ப்பது குறித்து ஆளுநர் உரையில் எந்த அம்சமும் இடம்பெறவில்லை. மத்திய அரசுக்கான கோரிக்கைகள்தான் இடம்பெற்றுள்ளன.

பாஜக கூட்டணியில் பாமக இருக்கும் நிலையில், எங்களிடம் ஆலோசிக்காமல் முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸை அறிவித்தது கூட்டணி தர்மத்துக்கு எதிரானது. இதுகுறித்து பாஜக தலைமை உரிய நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு எச்.ராஜா கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in