Published : 19 Feb 2015 08:37 AM
Last Updated : 19 Feb 2015 08:37 AM

தவறான மதிப்பீட்டால் தரமற்ற கற்களுக்கு பல கோடி அபராதம்: சகாயத்திடம் கிரானைட் நிறுவனம் குற்றச்சாட்டு

தரமற்ற கிரானைட் கற்களுக்கு தவறான முறையில் மதிப்பீடு தயாரித்து பல கோடி ரூபாய் அபராதத்தை அதிகாரிகள் விதித்துள்ளதாக குவாரி நடத்தும் நிறுவனம் ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயத்திடம் தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் நடந்துள்ள கிரானைட் முறைகேடு குறித்து 7-ம் கட்டமாக குவாரி அதிபர்களிடம் சகாயம் விசாரணை நடத்தி வருகிறார். 2 நாளாக நடந்த விசாரணையில் குவாரி அதிபர்கள் ஆஜராகவில்லை. இவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் களும் சகாயம் கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. பி.ஆர்.பழனிச்சாமி, செல்வராஜ் உள்ளிட்ட முக்கிய குவாரி அதி பர்கள் யாரும் ஆஜராகவில்லை. இந்நிலையில் நேற்று 3-ம் நாள் விசாரணை நடைபெற்றது. எம்எஸ் கிரானைட் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சண்முகசெல்வம், நீதிமன்றத்தில் வழக்கு நடப்பதால் வேறு எந்த தகவலையும் தெரி விக்க இயலாது’ எனக்கூறிவிட்டு சென்றார். கோரமண்டல் ஏஜென்சி சார்பில் அதன் பொது மேலாளர் கோபால், வழக்கறிஞர் குணசேக ரன், சட்ட ஆலோசகர் விக்னேஸ், ஏஜெண்ட் பாசிக் ஆகியோர் சகாயம் முன் ஆஜராகினர். அப்போது மதுரை குவாரியில் வெட்டி எடுக்கப்பட்டதில் கிடைத்த கிரானைட் கற்களை சகாயத்திடம் காட்டி விளக்கம் அளித்தனர். இதுகுறித்து விசாரணை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘கோரமண்டல் நிறுவனம் ராஜஸ்தான், கர்நாடகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் பல ஆண்டுகளாக கிரானைட் தொழிலில் ஈடுபட்டுள்ளது. நேர்மையாக தொழில் செய்து வருகிறோம். மதுரை குவாரியில் தரம் குறைந்த கற்களே கிடைத்தன. 20 சதவீத கற்களே விற்பனைக்கு உகந்ததாக இருந்தன. இதிலும் எதிர்பார்த்த தரம் இல்லை. ஆனால், அதிகாரிகள் 90 சதவீதம் கிரானைட் கற்கள் கிடைத்ததாகவும், தரமாக இருந்ததாகவும் தவறாக மதிப்பிட்டு, இதற்கு பல மடங்கு அபராதம் செலுத்தும்படி கூறியுள்ளனர். இதை ஏற்க முடியாது எனக் கூறி ஆவணங்களை தாக்கல் செய்தனர். இது பற்றி விசாரிப்பதாக சகாயம் தெரிவித்தார். கசானியா நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் பக்ருதீன் தாமதமாக வந்ததால், அவரை சகாயம் சந்திக்கவில்லை. பக்ருதீன் 15 நாள் அவகாசம் கேட்டுள்ளார்.

இன்றைய விசாரணையில் ஆஜராகும்படி முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகன் துரைதயாநிதி நடத்திய ஒலிம்பஸ் கிரானைட், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் பி.ராஜசேகரன் நடத்திவரும் பி.ஆர். கிரானைட் உட்பட 3 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. குவாரி அதிபர்கள் செய்த முறைகேடுகள் குறித்து உரிய பதில் பெற முடியாத நிலையில், அவர்கள் மீதான புகார்கள், ஆதாரங்களை ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சகாயம் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x