

பழநி கோயில் தைப்பூச விழா கடந்த 28-ம் தேதி கொடியேற்றத் துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் வள்ளி, தெய்வானை சமேதரராக முத்துக்குமாரசாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பின்னர் சுவாமி வெள்ளி ரதத்தில் ரத வீதிகளில் உலா வந்தார்.
தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று மாலை பெரியநாயகியம்மன் கோயில் முன்பிருந்து தொடங்கியது. கடந்த முறை தேரோட்ட விழாவில் பங்கேற்காத கோயில் யானை கஸ்தூரி இந்த ஆண்டு தேரை தள்ளியது.
தமிழகம் முழுவதும் இருந்து திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெற்றிவேல் வீரவேல், முருகனுக்கு அரோகரா கோஷம் விண்ணைப் பிளக்க தேரை வடம்பிடித்து இழுத்தனர். நான்கு ரதவீதிகளை சுற்றிவந்த தேர், மாலை 5.45 மணிக்கு நிலையை அடைந்தது.
வடலூரில் தைப்பூசம்
கடலூர் மாவட்டம் வடலூரில் ராமலிங்க வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூச விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 144-வது தைப்பூச ஜோதி தரிசன விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி வடலூர் சத்திய ஞானசபையில் கொடியேற்றப்பட்டது. இதேபோல் வள்ளலார் பிறந்த மருதூரில் உள்ள அவரது இல்லம், வள்ளலார் தண்ணீரால் விளக்கு எரிய செய்த கருங்குழி, வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் ஆகிய பகுதிகளிலும் கொடி ஏற்றப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச ஜோதி தரிசனம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி சத்திய ஞானசபையில் காலை 6 மணி மற்றும் 10 மணி, நண்பகல் 1 மணி ஆகிய நேரங்களில் ஏழு திரைகள் விலக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.