Published : 22 Feb 2015 10:55 AM
Last Updated : 22 Feb 2015 10:55 AM

அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சகோதரிகள் 3 பேர் உண்ணாவிரதம்

தங்களை மீண்டும் அரவிந்தர் ஆசிரமத்துக்குள் அனுமதிக்க வலியுறுத்தி, ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சகோதரிகள் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.

பீகார் மாநிலம் பொகாரா பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத் (86). இவரது மனைவி சாந்திதேவி. இவர்கள் தங்களது மகள்களான ஜெயஸ்ரீ (54), அருணாஸ்ரீ (52), ராஜஸ்ரீ (49), நிவேதிதா (42), ஹேமலதா (39) ஆகியோருடன் புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்துக்கு வந்து அங்குள்ள விடுதியில் நீண்ட காலமாக தங்கியிருந்தனர்.

இந்த நிலையில் ஆசிரமத்தில் முறைகேடுகள் நடப்பதாக ஜெயஸ்ரீ உள்ளிட்ட 5 சகோதரிகளும் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். ஆசிரம நிர்வாகத்தினர் நீதிமன்ற தீர்ப்பை வைத்து கடந்த டிச.17-ம் தேதி சகோதரிகள் 5 பேரையும் ஆசிரம விடுதியில் இருந்து போலீஸார் மூலம் வெளியேற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் போராடினர்.

ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதால் மனமுடைந்த சகோதரிகள், டிச.18-ம் தேதி பெற்றோருடன் சேர்ந்து காலாப் பட்டு அருகே கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் சாந்திதேவி, அருணாஸ்ரீ, ராஜஸ்ரீ ஆகியோர் உயிரிழந்தனர். பிரசாத், நிவேதிதா, ஜெயஸ்ரீ, ஹேமலதா ஆகியோர் உயிர் தப்பினர். இவர்கள் மீண்டும் ஆசிரமத்தில் தங்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் ஆசிரம நிர்வாகத்தை கண்டித்து ஹேமலதா தலைமையில் நிவேதிதா, ஜெயஸ்ரீ ஆகியோர் நேற்று புதுச்சேரி தலைமை தபால் நிலையம் எதிரில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாறன், மாணவர் கூட்டமைப்பு சாமிநாதன், மனித உரிமை பாதுகாப்பு கழகம் முருகானந்தம், ஐஎன்டியூசி சரவணன் உள்ளிட்ட பலர் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டனர்.

ஆசிரமத்தில் சட்ட விரோதமாக செயல்படும் மனோஜ்தாஸ் குப்தா, திலீப்குமார், பிரபாகர், ரூபன்குண்டா, திலீப் பெக்தான் உள்ளிட்டோரை வெளியேற்ற வேண்டும். முறைகேடுகள் தொடரும் ஆசிரமத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். மீண்டும் சகோதரிகளை ஆசிரமத்தில் அனுமதிக்க வேண்டும் என உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.

தொடர்ந்து பொதுமக்களிடம் அரவிந்தர் ஆசிரமத்துக்கு எதிரான கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை சகோதரிகள் விநியோகம் செய்தனர். இந்த போராட்டத்தையொட்டி தபால் நிலையம், ஆசிரமத்துக்கு சொந்தமான விடுதிகள், நிறுவனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x