

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கை விரைவில் விசாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி தமிழக வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து மேல்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் தேமுதிக உறுப்பினர் பார்த்திபன் பேசும்போது, காவிரி ஆற்றின் உபரி நீரை பயன்படுத்துவது குறித்தும், காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னவென்றும் கேட்டார்.
அதற்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பதில் வருமாறு:
காவிரிப் படுகையில் அளவுக்கு அதிகமாக மழை பெய்து, உபரி நீர் வெளியேற்றப்படும்போது, அந்த உபரி நீரைப் பயனுள்ள வகையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கில், காவிரி – வைகை – குண்டாறு – வைப்பாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, முதல் கட்டமாக கட்டளைக் கால்வாய் என்ற திட்டம் நிறைவேற்றப்பட்டு அதன்மூலம் காவிரியில் இருந்து வைகை இணைப்பையும், அங்கிருந்து குண்டாறு இணைப்பையும், குண்டாற்றில் இருந்து வைப்பாறு இணைப்பையும் செயல்படுத்த திட்டங்கள் தயாரிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் இரண்டு புதிய தடுப்பணைகள் கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறும், தமிழ்நாட்டின் இசைவு இல்லாமல் கர்நாடக அரசின் எந்தவொரு பாசனத் திட்டத்துக்கும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் மற்றும் நீர் ஆதாரத் துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கக்கூடாது என்று பிரதமருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். இதுபோல கர்நாடக அரசுக்கும், மத்திய நீர் ஆதாரத் துறை அமைச்சகத்திற்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இக்கடிதங்களுக்கு மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசிடம் இருந்து பதில் வராததால், கர்நாடக அரசு இரண்டு அணைகள் கட்டுவதற்காக கோரியுள்ள தொழில்நுட்ப ஆய்விற்கான விருப்பம் கோரும் அறிவிப்பை திரும்ப பெற கோரியும், கர்நாடக காவிரிப் படுகையில் காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையில் குறிப்பிட்டுள்ள திட்டங்களுக்கு மாறாக இவ்விரு அணைகள் கட்டும் பணிகளையோ அல்லது வேறு எந்தவொரு புதிய திட்டங்களையோ கர்நாடக அரசு மேற்கொள்ளக்கூடாது என்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை மற்றும் உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரும் வரையிலும் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று உத்தரவிடக் கோரியும் கடந்த ஆண்டு நவம்பர் 18-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.
கர்நாடக அரசு தனது 18-11-2014 நாளிட்ட கடிதத்தில் ஏற்கனவே நிலுவையில் உள்ள இடைக்கால மனுவில் உச்ச நீதிமன்றத்துக்கு தெரிவிக்காமல் இந்த திட்டத்தை நிறைவேற்றப் போவதில்லை என்று தெரிவித்துள்ளது. கர்நாடக அரசு தன்னிச்சையாக மேற்கொள்ளும் திட்டங்களை தடுத்து நிறுத்தும் வகையில், கடந்தாண்டு டிசம்பர் 5-ம் தேதி இதுகுறித்து சட்டமன்றத்தில் அரசு தனித் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக டிசம்பர் 12-ம் தேதி பிரதமருக்கு நான் அனுப்பிய கடிதத்துடன் தமிழக சட்டப்பேரவையின் தீர்மானத்தையும் அனுப்பியுள்ளேன். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை கர்நாடக அரசு எந்தவொரு புதிய திட்டத்தையும் மேற்கொள்ளக்கூடாது என்று கர்நாடக அரசுக்கு அறிவுறுத்துமாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தமிழக அரசால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கினை விரைவில் எடுத்துக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி தமிழக வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.