Published : 05 Feb 2015 09:37 AM
Last Updated : 05 Feb 2015 09:37 AM

திட்டக்குடி அருகே மணல் குவாரி முற்றுகை: போலீஸ் தடியடி, பெண்கள் உட்பட 17 பேர் காயம்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள நெய்வாசல் கிராமத்தின் வெள்ளாற்று பகுதியில் அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது. இந்நிலையில் இங்கு மணல் எடுக்கும் பகுதி அரியலூர் மாவட்டம் சன்னாசிநல்லூர் கிராமத்துக்குச் சொந்தமானது எனக் கூறி கடந்த சிலநாட்களுக்கு முன்பு அந்தக் கிராம மக்கள் பொக்லைன் இயந்திரங்களை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து இரு மாவட் டத்தைச் சேர்ந்த வட்டாட்சியர்கள், நிலஅளவைத்துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் எல்லையை அளந்து கல் நட்டனர். இந்நிலையில் அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் சிவசங்கர் எம்எல்ஏ தலைமையில் அனைத்து கட்சியினர் மற்றும் சன்னாசி நல்லூர் கிராம மக்கள் ஆகியோர் இணைந்து மணல்குவாரியில் முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.

இதற்காக நேற்று காலை அந்தக் கிராமத்தில் அனைத்து கட்சியினர் கண்டன கூட்டம் நடத்தினர். இதனையடுத்து அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் என சுமார் 400 பேர் கடலூர் மாவட்ட பகுதியில் இயங்கி வந்த மணல் குவாரியை முற்றுகையிட்டனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர். டிஎஸ்பிக்கள் பாண்டியன், கார்த்திகேயன், கணேசன் ஆகியோர் தலைமையிலான போலீஸார் முற்றுகையிட்டவர்களை அகற்ற முயன்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த சிலர் போலீஸார் மீது கல் மற்றும் மணலை அள்ளி வீசினர்.

இதனைத் தொடர்ந்து போலீஸார் தடியடி நடத்தினர். இதில் சன்னாசிநல்லூரை சேர்ந்த நீலமேகம், பழனியம்மாள், வேல்முருகன், பாபு, தனம், பார்வதி, பால்ராஜ் உள்ளிட்ட 17 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் திட்டக்குடி, செந்துறை, அரியலூர் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

மணல் மற்றும் கல்வீச்சில் காயமடைந்த ஆவினங்குடி எஸ்ஐ ஜெயபால், போக்குவரத்து எஸ்ஐ செல்வராஜ், சிறப்பு காவல் படையைச் சேர்ந்த ஜெயவதினி, வானதி உள்ளிட்ட 9 பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார், வட்டாட்சியர்கள் தேவநாதன், ரவி, பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் பாஸ்கர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ சிவசங்கர் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது வரும் 19-ம் தேதி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது என்றும் அதுவரை தொடர்ந்து மணல் குவாரியை போலீஸ் பாதுகாப்புடன் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. அதன் பிறகு மணல் குவாரி போலீஸ் பாதுகாப்புடன் இயங்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x