

சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையம் விரிவாக்கம் மற்றும் நவீனப்படுத்தப்பட்டு கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட்டது. விமான நிலையம் திறக்கப்பட்டதில் இருந்து உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையத்தில் கண்ணாடி கதவுகள், கிரானைட் கற்கள் உடைந்து விழுவது தொடர்ந்து நடந்து வருகிறது. 32-வது முறையாக உள்நாட்டு முனையத்தின் புறப்பாடு நுழைவு வாயிலில் கேட் எண்.14-ல் உள்ள கண்ணாடி கதவு கடந்த மாதம் 12-ம் தேதி உடைந்து விழுந்தது.
இந்நிலையில், 33-வது முறை யாக நேற்று காலை 9.30 மணி அளவில் உள்நாட்டு முனையத்தின் பயணிகள் புறப்பாடு கேட் எண்-1 அருகில் இருந்த சுவரில் பதிக்கப் பட்டிருந்த 2 கிரானைட் கற்கள் (ஒரு கல் 6 அடி உயரம் 3 அடி அகலம்) திடீரென உடைந்து விழுந்தது. அந்த நேரத்தில் கொச்சி, பெங்களூர் செல்ல இருந்த பயணிகள், இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு நடத்திய விமான நிலைய உயர் அதிகாரிகள், ‘கிரானைட் கற்கள் சரியாக ஒட்டாததால் இந்த விபத்து நடந்துள்ளது. அதனால் பயணிகள் யாரும் பயப்பட வேண்டாம்’ என கேட்டுக் கொண்டனர்.
அதன்பின் விமான நிலைய பணியாளர்கள் உடைந்து விழுந்த கிரானைட் கற்களை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது