Published : 07 Feb 2015 14:36 pm

Updated : 07 Feb 2015 14:38 pm

 

Published : 07 Feb 2015 02:36 PM
Last Updated : 07 Feb 2015 02:38 PM

முதல் சர்வதேச வலிப்பு விழிப்புணர்வு நாள்: பிப்ரவரி 9 - புரிந்துகொள்ளுதல் உயிர் காக்கும்

9

உலகில் ஆயிரம் பேரில் 4 முதல் 10 பேருக்கு வலிப்பு இருக்கிறது. இந்தியாவில் 60 லட்சம் பேருக்கு வலிப்பு இருப்பதாக மருத்துவ ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

வலிப்பு என்பது ஒரு நோயின் அறிகுறிதான். இது ஒரு நோய் அல்ல. மூளையில் உள்ள திசுக்கள் நேரடியாகவோ அல்லது உடல்நிலை பாதிக்கப்படும் போதோ வலிப்பு ஏற்படலாம். மூளையில் தோன்றக்கூடிய கட்டிகள், மூளைத் திசுக்களைத் தாக்கும் கிருமிகள், மூளையில் ஏற்படக்கூடிய காயங்கள், மூளைத் திசுக்கள் சிதைந்து போவதால் ஏற்படும் பாதிப்புகள், மூளை ரத்தக்குழாய் பாதிப்பு ஆகியவற்றின் காரணமாக வலிப்பு ஏற்படலாம்.

காரணம் என்ன?

இவை தவிரப் பிறவியிலேயே மூளையில் மாற்றம் ஏற்பட்டவர்கள், மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளும் இந்த நோய்க்கு ஆளாகலாம். பிறந்ததில் இருந்து 2 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்குக் கிருமி தொற்று மூளையைத் தாக்குவதால், குழந்தையின் ரத்தத்தில் சர்க்கரை, கால்சியம், மக்னீசியம், ‘பிரிடாக்சின்’ என்ற வைட்டமின் சத்து குறைவு காரணமாகவும் மூளை வளர்ச்சி பாதிக்கப்படலாம்.

பெரும்பாலும் 6 மாதம் முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குக் காய்ச்சல் காரணமாக வலிப்பு (‘பெப்ரைல் பிட்ஸ்’) ஏற்படுகிறது. 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான காய்ச்சல் குழந்தைகளைத் தாக்கும்போது, காய்ச்சல் வந்த 6 மணி முதல் 8 மணி நேரத்தில் வலிப்பு ஏற்படலாம். இத்தகைய வலிப்பு சில நிமிடங்களில் குறைந்துவிடும். மதுப் பழக்கம் மூலம் ஏற்படும் தலைக்காயங்கள், மூளையில் காணப்படும் ரத்தக்குழாய் மாற்றங்கள் காரணமாகவும் வலிப்பு ஏற்படலாம்.

பரம்பரை பாதிப்பா: வலிப்பு பரம்பரையாக வரலாம் எனத் தற்போது கண்டறியப்பட்டு உள்ளது. வலிப்பு உள்ளவர்களின் உறவினர்களை ஆய்வுக்கு உட்படுத்தியபோது வலிப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் 6 மடங்கு அதிகம் காணப்பட்டது.

சிகிச்சை முறைகள்

வலிப்பைக் குறைக்கவும் தடுக்கவும் வலிப்பு நீக்கி மருந்துகள் நிறைய இருக்கின்றன. மருந்துகளுடன் கூடிய மருத்துவ சிகிச்சை பயன் அளிக்கும். முறையாகச் சிகிச்சை பெறுகிறவர்களில் 60 முதல் 80 சதவீதம் பேருக்கு வலிப்பு வருவது முழுவதுமாகத் தடுக்கக்கூடியதாகவும், 10 சதவீதம் பேருக்கு வலிப்பு வருவதை குறைக்கவும் முடியும்.

வலிப்பு உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டுமோ என்று அச்சப்படத் தேவையில்லை. மருந்து சாப்பிட ஆரம்பித்து 3 ஆண்டுவரை வலிப்பு வரவில்லை என்றால் மாத்திரைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து, பின்னர் முழுமையாக நிறுத்திவிடலாம். உடனடியாக மாத்திரைகளை நிறுத்துவதோ, நேரம் தவறி உட்கொள்வதோ கூடாது.

எச்சரிக்கை

முக்கியமாக, வலிப்பு வந்தவர்கள் விபத்துக்குள்ளாவதைத் தடுக்க வேண்டும். உயரமான இடங்களில் வேலை பார்த்தல், எந்திரங்களில் பணிபுரிதல், தண்ணீருக்கு அடியில் இயங்கக்கூடிய பணிகளில் ஈடுபடுதல், வாகனம் ஓட்டுதல் போன்ற பணிகளைத் தவிர்க்க வேண்டும். வலிப்பு உள்ள குழந்தைகளைக் குளம், குட்டை, கிணறு ஆகிய இடங் களுக்கு அருகே விளையாட அனுமதிக்கக் கூடாது.

தடுப்பது எப்படி?

குழந்தைகளுக்கு வலிப்பு உண்டாவதைத் தடுக்க நிறைய வழிமுறைகள் உள்ளன. கர்ப்பத்துக்கு முன்னும் பின்னும் சரியான பராமரிப்பு முறை, தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு பிரசவம் மேற்கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் குழந்தைகளுக்கு வலிப்பு உண்டாவதைத் தடுக்கலாம். போதுமான ஊட்டச்சத்து, தக்க நேரங்களில் தடுப்பூசி போடுவது, தலைக்காயங்களைத் தவிர்ப்பது ஆகியவையும் அவசியம்.

முதல் சர்வதேச நாள்

வலிப்பு பற்றி நிறைய மூடநம்பிக்கைகள் நிலவுகின்றன. மூடநம்பிக்கைகளை நம்பிக் கொண்டிருப்பது பிரச்சினையை மோசமாக்கவே செய்யும். மருத்துவச் சிகிச்சை மூலம் இதைக் குணப்படுத்த முடியும். இந்தியாவில் ஆண்டுதோறும் நவம்பர் 17-ம் தேதி தேசிய வலிப்பு விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

உலக அளவில் இந்த நோயின் தாக்கத்தை உணர்த்தவும் விழிப்புணர்வை அதிகரிக்கவும் இந்த ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி சர்வதேச வலிப்பு விழிப்புணர்வு நாள் முதல்முறையாக அனுசரிக்கப்படுகிறது. வலிப்பு பாதிப்பு இல்லாத புதிய உலகைப் படைக்க நம்மால் ஆன முயற்சிகளைச் செய்வோம்.

கட்டுரையாளர், மூளை நரம்பியல் மற்றும் வலிப்பு நோய் நிபுணர்
தொடர்புக்கு: drmaaleem@hotmail.com

முதல் சர்வதேச வலிப்பு தினம்உயிர் காக்கும்சிகிச்சை முறைகள்

You May Like

More From This Category

More From this Author