Published : 08 Feb 2015 10:58 AM
Last Updated : 08 Feb 2015 10:58 AM

கேட்காமலே கிடைத்தது ரூ.14.50 லட்சம்: விபத்தில் கால் இழந்த சிறுமிக்கு கருணை காட்டியது உயர் நீதிமன்றம்

விபத்தில் காலை இழந்த 13 வயது சிறுமிக்கு ரூ14.50 லட்சம் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. விபத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி இழப்பீட்டுக்காக நீதிமன்றத்தை அணுகாத நிலையில், இவ்வளவு பெரிய தொகை இழப்பீடு வழங்க உத்தரவிட்டது இது முதல்முறையாகும்.

தூத்துக்குடியில் 1.3.2010-ல் நடைபெற்ற விபத்தில் 8-ம் வகுப்பு மாணவி யாஸ்மின் பலத்த காயமடைந்தார். இதில் அவரது ஒரு கால் முழுமையாக துண்டிக்கப்பட்டது. விபத்துக்கு காரணமான வாகனம் காப்பீடு செய்யப்பட்டிருந்த ஸ்ரீராம் பொது காப்பீட்டு நிறுவனத்திடம் ரூ.15 லட்சம் இழப்பீடு கேட்டு யாஸ்மின், தூத்துக்குடி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் யாஸ்மினுக்கு ரூ.5.58 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் 2.1.2011-ல் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி ஸ்ரீராம் பொது காப்பீட்டு நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.விமலா பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கில் விபத்தில் காயமடைந்த சிறுமியின் இழப்பீட்டு கோரிக்கையில் நியாயம் இருப்பது தெரிந்தும் காப்பீட்டு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. காப்பீட்டு நிறுவனம் கவுரவ பிரச்சினையாக இதை எடுத்துக்கொண்டுள்ளது. தொழில்நுட்ப காரணங்களையும், நியாயமற்ற காரணங்களையும் கூறிக்கொண்டு மேல்முறையீடு செய்வதை காப்பீட்டு நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும். பிரச்சினைகளை பொதுநலத்துடன் அணுக வேண்டும்.

விபத்தில் 13 வயது சிறுமி ஒரு காலை இழந்துள்ளார். ஆனால் செயற்கைக்கால் பொருத்த கீழ் நீதிமன்றம் தனி இழப்பீடு வழங்கவில்லை. இது ஒரு கட்டிடம் கட்டும்போது ஒரு மூலையை கட்டி முடிக்காமல்விட்டதுபோல் உள்ளது. சிறுமி வளர வளர அவரது செயற்கைக்காலில் மாற்றம் செய்ய வேண்டும். அதற்கு பணம் தேவை. மேலும் விபத்தால் சிறுமிக்கு ஏற்பட்ட திருமண இழப்புக்கும் சரியான இழப்பீடு வழங்கவில்லை.

விபத்தில் சிக்கும் 15 வயதுக்கு உட்பட்டவர்களின் மாத வருமானத்தை ரூ.4000 என நிர்ணயம் செய்ய வேண்டும் என பல வழக்குகளில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளபோதும், இந்த வழக்கில் சிறுமியின் மாத வருமானம் ரூ.1,250 என கீழ் நீதிமன்றம் நிர்ணயம் செய்தது நியாயமற்றது.

எனவே, கீழ் நீதிமன்றம் வழங்கிய இழப்பீட்டு தொகை ரூ.14.50 லட்சமாக உயர்த்தப்படு கிறது. இதில் சிறுமிக்கு செயற்கைக் கால் பொருத்துவதற்கான செலவாக ரூ.1.50 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரூ.14.50 லட்சத்தை காப்பீட்டு நிறுவனம் சிறுமிக்கு 6 வாரத்தில் வழங்க வேண்டும். காப்பீட்டு நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x