Published : 26 Feb 2015 10:20 AM
Last Updated : 26 Feb 2015 10:20 AM

பட்ஜெட் 2015 எதிர்பார்ப்பு: நான்கு முக்கிய கோரிக்கைகள்

இலவம் பஞ்சுக்கான சேவை வரியை குறைக்க கோரிக்கை

மத்திய அரசு இலவம் பஞ்சுக்கான வெளிமாநில சேவை வரியை 1 சதவீதமாகக் குறைக்க பட்ஜெட்டில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போடி இலவம் பஞ்சு உற்பத்தியாளர்கள் சங்கச் செயலாளர் எஸ்.முத்துராமலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.

தேனி மாவட்டம், போடி பகுதியில் தயாரிக்கப்படும் மெத்தை, தலையணைகள் கேரளம், மகாராஷ்டிரம், மேற்குவங்கம் உட்பட பிற மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. இத்தொழிலில் ஆண்டுக்கு ரூ.100 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெறுகிறது.

இது குறித்து எஸ்.முத்துராமலிங்கம் ‘தி இந்து’ விடம் கூறும்போது, ‘‘வெளிமாநிலங்களில் விற்பனை வரி 2 சதவீதம், தமிழகத்தில் வாட் வரி 5, சேவை வரி 1 என மொத்தம் 8 சதவீதம் வரி வசூலிக்கப்படுகிறது. கூடுதல் வரிச்சுமை காரணமாக நேர்முகமாகவும், மறைமுகமாகவும் 6 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தற்போது 40 சதவீத ஆலைகள் மூடப்பட்டு இலவம் பஞ்சு தொழில் முடங்கியுள்ளது. தமிழக அரசு 6 சதவீத வரியை 2 சதவீதமாகவும், மத்திய அரசு வெளிமாநில சேவை வரியை 1 சதவீதமாகவும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார் எஸ். முத்துராமலிங்கம்

ஸ்டார் சொர்ணகார் திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்த வேண்டும்

முந்தைய காங்கிரஸ் அரசால், ஸ்டார் சொர்ணகார் திட்டத்தின் மூலம் காரைக்குடியில் மட்டும் நகைத் தொழிலாளர்களுக்கு மூலதனக் கடனாக தங்கம் வழங்கப்பட்டதை நாடு முழுவதும் விரிவுபடுத்தவேண்டும் என நகை தொழிலாளர்கள் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக நகைத் தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த உமாபதி கூறும்போது:

முன்பைவிட தற்போது உற்பத்தி அளவு அதிகரித்த போதிலும், கூலி அளவு குறைந்து கொண்டே வருகிறது. தங்கம் கொடுத்து நகைகள் செய்ய சொன்ன காலம் மாறி இன்று சொந்த முதலீடு இருந்தால் மட்டுமே ஆர்டர் பெறுகிற நிலை உள்ளது. மெஷின் நகைகளின் வருகை, மூலதனப் பற்றாக்குறை போன்றவை நகைத் தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கி உள்ளன.

நாளுக்கு நாள் புதிய நகைக்கடைகளும், வாடிக்கையாளர் எண்ணிக்கையும் அதிகரித்தபடி உள்ளன. ஆனால், நகைத் தொழிலாளர்களின் வாழ்க்கை மோசமான நிலையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.

எதிர் வரும் மத்திய பட்ஜெட்டில் (2015-16) ‘கோவை, விழுப்புரம் மற்றும் சென்னையில் நகைத் தொழிலுக்கான சிறப்பு தொழிற்பேட்டை (கிளஸ்டர்) தொடங்க வேண்டும். முந்தைய காங்கிரஸ் அரசால் ஸ்டார் சொர்ணகார் திட்டத்தின் மூலம் காரைக்குடியில் மட்டும் நகைத் தொழிலாளர்களுக்கு மூலதனக் கடனாக தங்கம் வழங்கப்பட்டது. இதைப் போன்று தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ள நகைத் தொழிலாளர்களுக்கும் மானியத்துடன் கூடிய மூலதனக் கடனாக தங்கத்தை வழங்க வேண்டும்.

மாவட்ட வாரியாக குளிர்பதன சேமிப்பு கிடங்கு

காய்கறி மற்றும் பழங்களை சேமித்து வைக்க தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் இரண்டு பெரியளவிலான குளிர்பதன சேமிப்பு கிடங்குகள் அமைக்க வேண்டும் என வணிகர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா கூறும்போது,”மத்திய பாஜக அரசு பொருட்கள் அனைத்துக்கும் ஒரு முறை மட்டும் வரி செலுத்தும் திட்டமான, ஒரு முனை வரியை அமல்படுத்த வேண்டும். சில்லறை வணிகர்களுக்கு என்று தனியாக வங்கி உருவாக்க வேண்டும். சுங்கச்சாவடிகளில் உணவு பொருள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரியை ரத்து செய்ய வேண்டும். ரூ. 50 லட்சத்துக்குள் விற்பனை செய்யும் வணிகர்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும். மாநிலத்தில் குளிர்பதன சேமிப்பு கிடங்குகளை அனைத்து மாவட்டங்களிலும் அமைக்க வேண்டும்” என்றார்.

கோயம்பேடு மொத்த காய்கறி விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் சவுந்தரராஜன் கூறும்போது, “ஹரியாணா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் காய்கறி மற்றும் பழங்களை சேமித்து வைக்க குளிர்பதன சேமிப்பு கிடங்குகள் மாவட்டத்துக்கு மூன்று அல்லது நான்கு உள்ளன.

ஆனால் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும்தான் குளிர்பதன கிடங்குகள் உள்ளன. மத்திய அரசு தாக்கல் செய்யக்கூடிய பட்ஜெட்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் இரண்டு அல்லது மூன்று குளிர்பதன கிடங்குகள் அமைக்கும் திட்டங்கள் இடம் பெற வேண்டும்” என்றார்.

ஏலக்காய் விற்பனை வரியை குறைக்க வேண்டும்

ஏலக்காய் தொழில் நசிவடையாமல் இருக்க, விற்பனை வரியைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏல வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

இடுக்கி மாவட்டம் புத்தடி மற்றும் தமிழகத்தில் போடியிலும் ஏல மையங்கள் இயங்கி வருகின்றன. வாரத்துக்கு 3 நாட்கள் புத்தடியிலும், மற்ற நாட்களில் போடியிலும் ஏல மையம் செயல்படுகிறது.

இது குறித்து ‘தி இந்து’விடம் வாசனை திரவியங்கள் வியாபாரிகள் முன்னேற்ற நலச்சங்க தலைவர் எம்.சம்பத் கூறும்போது, ‘தமிழக ஏல வியாபாரிகள் பலர் கேரளத்தில் பதிவு செய்து, மத்திய விற்பனை வரி 2 சதவீதத்தை செலுத்தி விட்டு கொள்முதல் செய்கின்றனர். போடி ஏல மையத்துக்கு சில வியாபாரிகளே வருகின்றனர். டெல்லி, கான்பூர், மும்பைக்கு தமிழக வியாபாரிகள் ஏலக்காய்களை விற்பனைக்கு அனுப்பும்போது, அங்குள்ள வியாபாரிகள் விற்று முதல் விற்பனை வரியை (எம்ஆர்எம்) செலுத்தாமல் விட்டு விடுகின்றனர். இதனால் எங்களுக்கு கூடுதல் வரிச் சுமை ஏற்படுகிறது.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்படும் ஏலக்காய்களுக்கு அந்நியச் செலாவணி ஊக்குவிப்பு என்று கூறி, மத்திய அரசு வரி விதிப்பதில்லை, ஆனால், வெளிநாட்டில் ஏலக்காய்களை வாங்க, அங்குள்ள வியாபாரிகள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை, மத்திய அரசு 2 சதவீத விற்பனை வரியை 1 சதவீதமாகக் குறைத்தால்தான் ஏலத்தொழில் நசிந்து போகாமல் காப்பற்ற முடியும்’ என்றார்.

தொகுப்பு: ஆர்.சவுந்தர், எஸ்.நீலவண்ணன், எல்.ரேணுகாதேவி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x