Published : 13 Feb 2015 10:59 AM
Last Updated : 13 Feb 2015 10:59 AM

காதலர் தினத்தையொட்டி கோயம்பேட்டில் குவியும் ரோஜா மலர்கள்: ரூ.25 லட்சத்துக்கு விற்பனையாகும் என்று எதிர்பார்ப்பு

காதலர் தினத்தையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் பல்வேறு வண்ணங்களில் ரோஜா மலர்கள் குவிந்துள்ளன.

காதலர் தினத்தையொட்டி ரோஜா மலர்கள் அதிகமாக விற்பனையாவது வழக்கம். காதலர் தினத்துக்கு இன்னும் ஒருநாள் (பிப்.14) மட்டுமே உள்ள நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ரோஜா மலர்கள் வரத்து அதிகரித்துள்ளது.

இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் வியாபாரி வி.எம்.இந்திரகுமார் கூறியதாவது: உள்ளூர் ரோஜா மலர்கள் ஒரே நாளில் உதிர்ந்துவிடும் என்பதால் வெளிநாட்டு ரக ரோஜா மலர்களை காதலர்கள் விரும்பி வாங்கி தங்கள் அன்பிற்குரியவர்களுக்கு பரிசளித்து மகிழ்கின்றனர். கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 90 சதவீத மலர்கள் ஓசூரில் இருந்தும், 10 சதவீதம் ஊட்டி, பெங்களூரு ஆகிய பகுதிகளில் இருந்தும் வருகின்றன.

கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்தம் 460 பூக்கடைகள் உள்ளன. இவற்றில் 100 கடைகளில் ரோஜா மலர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த ரோஜா மலர்கள் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், வெள்ளை உள்ளிட்ட 7 நிறங்களில் கிடைக்கின்றன. வழக்கமான நாட்களில் ஒரு மலர் ரூ.15 வரை விற்பனையாகும். 1 டன் வரை வரத்து இருக்கும். ரூ.3 லட்சம் வரை வர்த்தகம் நடைபெறும்.

காதலர் தினத்தையொட்டி வியாழக்கிழமை மாலை நிலவரப்படி ஒரு மலர் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. காதலர் தின விற்பனைக்காக 4 டன் ரோஜா மலர்கள் கோயம்பேடு மார்க்கெட்டில் குவிக்கப்பட்டுள்ளன. பிப்ரவரி 13, 14 ஆகிய தேதிகளில் சுமார் ரூ.25 லட்சத்துக்கு ரோஜா மலர்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x