

தமிழ்நாடு மின்சார வாரியம் கடுமை யான நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில், மாநிலத்தில் உள்ள அனைத்து மின் நிலையங்களிலும் முழுமையான மின் உற்பத்தி நடைபெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் வழக்கறிஞர்கள் மற்றும் மனித உரிமைப் பிரிவின் ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்யக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி சட்ட மாணவர்கள் மேற்கொண்ட போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. சட்டக் கல்லூரி கட்டிடத்தை அரசு வலிமைப்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் மின்வாரியம் பலத்த நஷ்டத்தை சந்தித்துக் கொண்டுள்ளது. மின்சாரத்தை குறைந்த விலைக்கு வாங்குவதோடு, தமிழகத்தின் மின் உற்பத்தி மையங்களில் முழுமையான அளவு மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் ஏராளமான நீதிமன்றங்களில் போதிய அளவு நீதிபதிகள் இல்லை. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாகவுள்ளது. காவல் துறையினர் குற்றச் சம்பவங்களை தடுக்க வேண்டும்.
தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை பொறுப்புக்கு வெளி மாநிலத்தவரை நியமித்திருப்பதாக வாசன் விமர்சனம் செய்துள்ளார். எல்லோருமே இந்தியர்கள்தான். எங்கள் கட்சி உள் விஷயங்களில் அவர் தலையிடக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.