

வனக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நேற்று 8வது நாளாக நீடித்தது. 12 மாணவர்கள் மொட்டையடித்து திதி கொடுத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வனக் கல்லூரி மாணவ, மாணவிகள் தமிழ்நாடு வனத் துறையில் உள்ள வனச்சரகர் பணிக்கான புதிய அரசாணையை (ஜி.ஓ-76) திரும்ப பெற்று வனச் சரகர் காலி பணியிடத்துக்கான நேரடி நியமனத்தில் வனவியல் பட்டதாரிகளை கொண்டு நிரப்ப வேண்டும் என்ற பழைய அரசாணையை (ஜி.ஓ-118) அமல்படுத்த வேண்டும், வனவர் நியமனத்தில் வனவியல் பட்டதாரிகளுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி 8-வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மரத்துக்கு ராக்கி கட்டி, மரத்தைக் கட்டிப்பிடித்து, கண்ணைக் கட்டி, முகத்துக்கு கரிபூசி, தீச்சட்டி ஏந்தி மரங்களை சுற்றி வந்து என பல்வேறு நூதனப் போராட்டங்களை நடத்தினர். நேற்று 12 மாணவர்கள் மொட்டையடித்து இறந்தவர்களுக்கு திதி கொடுப்பது போல் பிண்டம் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மாணவிகளுக்கான கழிப்பிடத்தை நிர்வாகம் நேற்று மூடியதோடு, இவர்கள் அமர்ந்து போராடி வந்த வளாகத்தின் பகுதியில் இருந்த மின்சார விளக்கையும் கழட்டி விட்டதாகக் கூறுகின்றனர் மாணவர்கள்.
அடர்ந்த வனத்தின் நடுவே கொடிய விஷப் பாம்புகள், வன விலங்குகள் மத்தியில் போராடும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக ஆதங்கப்படுகின்றனர் இவர்களது பெற்றோர்.