

தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் நாராயணன் வரவேற்றார். 32 மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர் கழக தலைவர்கள், மாநிலத் துணை தலைவர்கள் பேசினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: அரசாணை 720-ல் மாற்றம் கோரி வருகிற மார்ச் மாதம் பிளஸ் 2 வினாத்தாள் திருத்தும் மையத்தில் கோரிக்கை அட்டை அணிந்து திருத்துவது. தேர்வுப்பணி, உழைப்பூதியம் மற்றும் மதிப்பூதியங்கள் இருமடங்காக வழங்க வேண்டும். வரும் காலங்களில் தேர்ச்சி விழுக்காட்டை காரணம் காட்டி முதுகலை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை கைவிட வேண்டும். விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்கிற கல்வித்துறையின் நடவடிக்கையால் மாணவர்களுக்கு மன அழுத்தம், ஆசிரியர்களுக்கு மனஉளைச்சல் ஏற்படுகிறது. இதனை கைவிட வேண்டும்.
ஊதிய முரண்பாட்டை களைந்து முதுநிலை ஆசிரியர் களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இதரபடிகள் அனைத்தையும், தமிழக அரசு ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத்திட்டத்தை தொடர வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. மாவட்ட செயலாளர் அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இப்பொதுக்குழுவில் 350-க்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரியில் நடந்த, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் பேசுகிறார் மாநில தலைவர் சுரேஷ்.