

பண்ணைகளில் இறைச்சிக் (பிராய்லர்) கோழிகளுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் மற்றும் மாமிசம் கலந்த தீவனங்கள் அளிப்பதை தடை செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இதுதொடர்பாக உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்ட புதிய அறிவிப்பில், ‘கோழிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் எடையை அதிகரிப்பதற்காக ஆன்டிபயாடிக் மருந்துகள் அளிப்பதை தடை செய்வது குறித்து புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டும். மாடு மற்றும் பன்றியின் இறைச்சி, எலும்பு, ரத்தம் ஆகியவை கலந்த தீவனத்தை அளிக்கக் கூடாது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரிகளிடம் பேசியபோது, ‘ஆன்டிபயாடிக் மருந்துகளை அளிப்பதை தடை செய்வது குறித்து நாடு முழுவதும் உள்ள உணவுப் பாதுகாப்பு ஆணையர்களிடம் விளக்கம் கேட்டுள்ளோம். பொதுமக்களிடமும் கருத்து கேட்டு வருகிறோம். அதன்பிறகு, புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும்’ என்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான அமைப்பு (Center for Science and Environment) வெளியிட்ட ஆய்வறிக்கையில், கோழி இறைச்சிகளில் மனிதர்களுக்கு கேடு விளைவிக்கக் கூடிய ஆன்டிபயாடிக் மருந்துகளான Oxytetracycline, Chlortetracycline, Doxycycline, Eurofloxacin, Ciprofloxacin, Fluroquinolone ஆகியவை அளவுக்கு அதிகமாக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது.
இந்த இறைச்சியை உட்கொள்வதால் மனிதர்களுக்கு மலட்டுத்தன்மை, குழந்தைகளுக்கு அதீத உடல் எடை வளர்ச்சி அல்லது எடை குறைதல், சீரற்ற முறையில் பெண் குழந்தைகள் பருவம் அடைதல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்தே உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக தெரிகிறது.
இந்தியாவில் கோழிப்பண்ணைத் தொழில் ஆண்டுக்கு 8-15 சதவீதம் வரை வளர்ந்து வருகிறது. நாட்டின் மொத்த முட்டை மற்றும் இறைச்சி உற்பத்தியில் தமிழகம் சிறப்பிடத்தில் உள்ளது. இந்தச் சூழலில் மேற்கண்ட விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டால் தமிழக கோழிப் பண்ணைத் தொழிலில் பெரும் தாக்கம் ஏற்படும் என்றே தெரிகிறது.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கோழி ஆராய்ச்சிப் பிரிவு துறைத் தலைவர் மருத்துவர் கே. மணி ‘தி இந்து’-விடம் கூறியதாவது:
‘‘மக்காச்சோளம், சோயா, கருவாடு, கிளிஞ்சல் சுண்ணாம்பு போன்றவை மட்டுமே கோழி தீவனத்தில் சேர்க்கப்படுகிறது. மாட்டிறைச்சி, எலும்பு, ரத்தம் ஆகியன கோழி தீவனங்களில் கலக்கப்படுவதில்லை. நோய் பாதிப்புக்கு உள்ளாகும் கோழிகளுக்கு மட்டும் 3 நாட்களுக்கு டெராமைசின், டெட்ராசைக்கிலின் ஆகிய மருந்துகள் அளிக்கப்படும்.
ஆயிரம் டன் தீவனத்துடன் இரண்டு கிலோ நோய் தடுப்பு மருந்துகளை கலக்க அறிவுறுத்தப்படுகிறது. அதன்படி ஒரு கிலோவுக்கு இரண்டு கிராம் மருந்து மட்டுமே கலக்கப்படுகிறது. இதனால், பாதிப்பு எதுவும் ஏற்படாது. எடையைக் கூட்ட ஊசிகள் போடப்படுவதில்லை. மேற்கண்ட மருந்துகளும் கோழி இறைச்சியிலோ, முட்டையிலோ இருப்பதில்லை. நன்கு வேக வைத்து இறைச்சியை உண்பதால் பாதிப்பு எதுவும் ஏற்படாது. பண்ணைக் கோழி இறைச்சி சாப்பிடுவதால் பெண் குழந்தைகள் சிறிய வயதில் பருவ நிலை அடைவர் என்பதும், உடல்நலக் கேடு ஏற்படும் என்பதும் தவறான தகவல்’’ என்றார்.
தமிழ்நாடு முட்டை மற்றும் கோழிப் பண்ணையாளர் சங்க நிர்வாகி வி. சுப்பிரமணியம் ‘தி இந்து’-விடம் கூறியதாவது:
‘‘கோழிகளுக்கு இயற்கையான தீவனங்களும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரையும் வழங்குகிறோம். அரசு அங்கீகரித்த ஆன்டிபயாடிக் மருந்தை மட்டுமே வழங்குகிறோம். சில இடங்களில் மாட்டிறைச்சி, ரத்தம் போன்றவை புரோட்டீ னாக வழங்கப்படுவதை மறுப்பதற் கில்லை. ஆனால், அவையும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு பாக்டீரியா பாதிப்பில்லை என்ற பிறகுதான் வழங்கப்படுகிறது.
கோழிக் கறி சாப்பிடுவதால் உடல் நலக்கேடு ஏற்படுகிறது; பெண் குழந்தைகளின் ஹார்மோன் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்று சொல்பவர்கள் இதுவரை ஆதாரம் எதையும் சமர்ப்பிக்கவில்லை. ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்தக்கூடாது என்று அரசு உத்தரவிட்டாலும்கூட தமிழகத்தில் தொழில் பாதிக்கப்படாது’’ என்றார்.