

ஆந்திர எல்லைப் பகுதியான திருவள்ளூர் மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க அரசு மருத்துவமனையில் தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட் டுள்ளது.
ஆந்திரம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளது. இதனால் ஆந்திரத்தை ஒட்டி அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், 5 படுக்கைகள் கொண்ட தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தனிப்பிரிவை நேற்று தொடங்கி வைத்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் பேசியதாவது:
பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க ஆந்திரத்தை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் சுகாதார குழுக்கள் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி ஆகிய அரசு மருத்துவமனைகளில் தனிப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த ‘டமி ஃபுளு’ மாத்திரைகள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்றார். நிகழ்ச்சியில், சார் ஆட்சியர் ராகுல்நாத், மருத்துவப் பணிகள் இணை இயக்குநர், கண்காணிப்பாளர் டாக்டர் தமிழ்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எல்லையில் முகாம்
திருவள்ளூர் மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சல் பரவாமல் இருக்க, மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் நேற்று தொடங்கியது.
திருவள்ளூர் ரயில் மற்றும் பஸ் நிலையங்கள், திருத்தணி அருகே பொன்பாடி சோதனைச் சாவடி, செங்குன்றம் சோதனைச் சாவடி என 6 இடங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
காலை 8 மணி முதல், இரவு 8 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் சுகாதார ஆய்வாளர் மற்றும் செவிலியர்கள், தன்னார்வலர்களான செவிலியர் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். இரு மாநிலங்களிடையே சென்று வரும் பயணிகளிடம் பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகள், தடுப்பு வழிமுறைகள் உள்ளிட்டவை அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படுகின்றன. பன்றிக் காய்ச்சல் குறித்த தகவல்களும் பொதுமக்களுக்கு விளக்கப்படுகிறது.
ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் முற்றிலும் கட்டுப்படுத்தும் வரை இந்த விழிப்புணர்வு முகாம் தொடரும் என, மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.