Last Updated : 24 Feb, 2015 12:21 PM

 

Published : 24 Feb 2015 12:21 PM
Last Updated : 24 Feb 2015 12:21 PM

சரியா, தவறா?- சைகோமெட்ரிக் தேர்வுகள்

சைகோமெட்ரிக் தேர்வுகளின் ஒரு பிரிவு Verbal Reasoning என்பது. இதில் ஒரு நூல் அல்லது ஒரு கட்டுரையின் ஒரு பகுதி அளிக்கப்படும். பிறகு சில வாக்கியங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு வாக்கியமும் சரியானதா, தவறானதா என்பதை நீங்கள் கூறவேண்டும்.

கொடுக்கப்பட்டுள்ள பகுதியைக் கொண்டு அது சரியானதா தவறானதா என்பதைக் கூறமுடியாது என்ற பதிலையும் ( அதாவது ‘சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம்’ என்ற பதிலை) தேர்ந்தெடுக்கலாம்.

எடுத்துக்காட்டாக இதே தொடரில் முன்பு அளிக்கப்பட்ட ஒரு பகுதியைக் கீழே கொடுத்திருக்கிறேன். படித்துவிட்டு அதற்குக் கீழே உள்ள வாக்கியங்களை மேலே கூறியபடி மதிப்பிடுங்கள்.

“ஒருவரின் புத்திசாலித்தனத்தை எப்படி அறிவது? தனி நபர் என்றால் கொஞ்ச நேரம் பழகியபின் அறிந்து கொள்ள முடியலாம். ஆனால் ஆயிரக்கணக்கான நபர்களின் புத்திசாலித்தனத்தை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் தேர்வு செய்யவேண்டுமென்றால்? கஷ்டம்தானே. ஏன், பொது அறிவுக் கேள்விகள் கேட்கலாமே என்கிறீர்களா?

தன்னைச் சுற்றி நடக்கும் விவரங்களை அவர் அறிந்து வைத்திருப்பதைத்தான் இதுபோன்ற கேள்விகள் காட்டிக் கொடுக்குமே தவிர, புத்திசாலித்தனத்தை அல்ல. தவிர, புத்திசாலித்தனத்தோடு வேறு சில குணங்களும்கூடச் சில வேலைகளுக்கு அவசியம். உதாரணத்துக்கு, ஒரு நிறுவனம் அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கும்போது அவர்கள் புத்திசாலியாக இருப்பதோடு, சவால்களைச் சமாளிக்கும் வல்லமை படைத்தவர்களாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கலாம்.’’

கேள்வி வாசகங்கள் இதோ.

(1) தன்னைச் சுற்றி நடக்கும் விவரங்களை ஒருவர் அறிந்து வைத்திருந்தால் அவர் புத்திசாலி அல்ல.

(2) தன்னைச் சுற்றி நடக்கும் விவரங்களை அறிந்து வைத்திருப்பவர் மக்காகவும் இருக்கலாம்.

(3) ஆயிரக்கணக்கானவர்களின் புத்திசாலித்தனத்தை ஆராய வெகுகாலமாகும்.

(4) எந்த வேலைக்கும் புத்திசாலித்தனம் மட்டும் போதாது.

(5) எந்த நிறுவனமுமே சவால்களைச் சமாளிக்கும் வல்லமை படைத்தவர்களைத் தேர்ந்தெடுக்கவே விரும்பும்

இதோ இவற்றுக்கான விடைகள்.

(1) சரியாகவும் இருக்கலாம் தவறாகவும் இருக்கலாம்

(2) சரி

(3) சரியாகவும் இருக்கலாம் தவறாகவும் இருக்கலாம் (கஷ்டம் என்று கூறப்பட்டிருக்கிறது. அதிக நேரம் ஆகும் என்று கூறப்படவில்லை)

(4) சரி. ( மூட்டை தூக்கும் வேலையைச் செய்யப் புத்திசாலித்தனம் எதற்கு என்றோ முட்டாள்கள் வேலை செய்வதில்லையோ என்றோ உங்களிடம் கேள்விகள் எழலாம். ஆனால் கொடுக்கப்பட்ட பகுதியில் இது போல் ஏதாவது இருக்கிறதா என்பதுதான் கேள்வி).

(5) தவறு. (விரும்பலாம் என்பது வேறு. விரும்பும் என்பது வேறு).

இப்போது அமரர் கல்கியின் சிவகாமியின் சபதம் நூலிலிருந்து ஒரு பகுதி கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

“ஆனி மாதத்திலே ஒரு நாள் வராகக் கொடி வானளாவப் பறந்த கூடாரத்துக்குள்ளே புலிகேசியின் மந்திராலோசனை சபை கூடிற்று. முன்னே வடபெண்ணை நதிக்கரையில், நாம் பார்த்த அதே படைத் தலைவர்கள் ஏழெட்டு பேர், எதிரில் விரித்திருந்த கம்பளத்தில் உட்கார்ந்திருக்க, வாதாபி மன்னன் தந்தச் சிங்காதனத்தில் கம்பீரமாக அமர்ந்திருந்தான்.

முன்னைக் காட்டிலும், புலிகேசியின் முகத்தில் கடூரமும், கோபமும் அதிகமாகக் கொதித்துக் கொண்டிருந்தன. படைத் தலைவர்களைப் பார்த்து, அவன் கூறினான் : “இந்த மகேந்திரவர்மனுக்குத் தகப்பன் பெயர் சிம்மவிஷ்ணு ; மகன் பெயர் நரசிம்மன். ஆனால் மகேந்திரனோ வெறும் நரியாக இரு க்கிறான். வளையில் நரி புகுந்து கொள்வதுபோல், இவன் கோட்டைக்குள்ளே புகுந்து கொண்டிருக்கிறான். நரி வளையில் இருந்து வெளியே வருமென்று எத்தனை நாளைக்குத்தான் காத்துக் கொண்டிருப்பது? உங்களில் யாருக்காவது ஏதாவது யோசனை தோன்றுகிறதா?”.

படைத் தலைவர்கள் மவுனமாயிருந்தார்கள். ஒருவராவது வாய் திறந்து பேசத் துணியவில்லை. “ஏன் எல்லோரும் மவுனம் சாதிக்கிறீர்கள்! வெற்றி மேல் வெற்றி கிடைத்துக் கொண்டிருந்தபோது, நான், நீ என்று எல்லோரும் யோசனை சொல்ல முன் வந்தீர்கள். யோசனை தேவையாக இருக்கும்போது வாயை மூடிக் கொண்டு மவுனிக்கிறீர்கள். ஆகா! நமது பிக்ஷு மட்டும் இப்போது இங்கிருந்தால்..?’’ என்று சொல்லிப் புலிகேசி பெருமூச்சு விட்டான்.

படித்து விட்டீர்களா? இப்போது கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்கள் சரியானவையா? தவறானவையா? அல்லது சரி, தவறு என்று கொடுக்கப்பட்ட பகுதியைக் கொண்டு தீர்மானிக்க முடியாதவையா? முடிவெடுங்கள்.

1. குறிப்பிடப்படும் அத்தனை பேரும் உட்கார்ந்த நிலையில் உள்ளனர்.

2. புலிகேசியின் கூற்றுப்படி தந்தையின் பெயரில் சிங்கமும், மகனின் பெயரில் நரியும் உள்ளன.

3. படைத்தலைவர்கள் ஒருபோதும் புலிகேசியின் எதிரில் வாய்திறந்து பேசத் துணிந்ததில்லை.

4. பன்றியும் இந்தப் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

5. காஞ்சிக் கோட்டையின் வெளியே புலிகேசிப் படைகள் வெகுநாள்களாக காத் துக் கொண்டிருந்தன.

உங்கள் வி டைகளோடு கீழே தரப்பட்டிருக்கும் விடைகளை ஒப்பிட்டுப் பாருங்கள்.

1. சரி. பிறர் தரையில் கம்பளத்திலும், வாதாபி மன்னன் சிங்காதனத்திலும் அமர்ந்தபடிதான் இருக்கிறார்கள்.

2. தவறு. மகனின் பெய ரில் நரி இருப்பதாகப் புலிகேசி கூறவில்லை.

3. தவறு. வெற்றி மேல் வெற்றி கிடைத்தபோது எல்லோரும் யோசனை கூறியிருக்கிறார்கள்.

4. சரி. பன்றியின் மறுபெயர் வராகம். வராகக் கொடி என்ற வார்த்தைகள் இடம் பெற்றிருக்கின்றன.

5. சரியா தவறா என்று கூற முடியாது. புலிகேசியின் படைகள் முற்றுகையிட்ட கோட்டை காஞ்சி என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் கொடுக்கப்பட்ட பகுதியில் அப்படிக் குறிப்பிடவில்லை.

மேலும் தெளிவு பெற (ஹிந்து தீபாவளி மலரில் வெளிவந்த எனது) கட்டுரைப் பகுதியைப் படியுங்கள். பிறகு கீழே உள்ள கேள்விகளுக்குவிடை கூறுங்கள்.

“பார்த்து வியக்க எங்கள் ஐரோப்பிய சுற்றுலாவில் பல விஷயங்கள் இருந்தன. என்றாலும் பாழாய்ப்போன மனித குலம் புரிந்த அக்கிரமங்களின் எச்சங்களும், நினைவூட்டல்களும் காணப்பட்ட சில இடங்கள் மறக்க முடியாதவை. முக்கியமாக ஜெர்மனியின் தலைநகரமான பெர்லினில் நாங்கள் கண்ட யூத அருங்காட்சியகம்.

இயற்கையின் வரலாறு அப்படியொன்றும் வேகமாக மாறிவிடவில்லை. கோடிக்கணக்கான ஆண்டுகளில் கண்டங்கள் இணைந்திருக்கலாம். பரிணாம வளர்ச்சி அடுத்தடுத்த கட்டங்களை எட்டியிருக்கலாம். ஆனால் மனிதன் மிகக் குறைந்த காலகட்டத்தில் (யுகங்களோடு ஒப்பிடும்போது அவன் வாழ்நாள் எவ்வளவு சிறியது!) பேரழிவை நடத்தி வருகிறான்.

யூத அருங்காட்சியகம் இதைத்தான் வலியுறுத்தியது. zஅருங்காட்சியகத்தை ஒட்டி இருந்த ஓர் உயர்ந்த கோபுரம் கோணல்மாணலாகக் காட்சியளித்தது. மற்றபடி அந்த அருங்காட்சியகத்தில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை வெளியில்’’.

(1) இயற்கையின் வரலாறு மெதுவாக மாறி வருகிறது

(2) கோடிக்கணக்கான ஆண்டுகளில் கண்டங்கள் இணைந்துள்ளன

(3) யுகங்களும் மனிதனின் ஆயுளும் ஒப்பிடத்தக்கவைதான்.

(4) அருங்காட்சியகத்தை ஒட்டி இருந்த ஓர் உயர்ந்த கோபுரம் கம்பீரமாகக் காட்சியளித்தது.

(5) கோணல் மாணலான கோபுரம் பெர்லினில் மட்டுமே உள்ளது.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x