Published : 24 Feb 2015 05:49 PM
Last Updated : 24 Feb 2015 05:49 PM

மன அழுத்தத்தால் கொடூரம்: குடும்பத்தினரை கொலை செய்து தற்கொலையை தேடிய நாமக்கல் விவசாயி

நாமக்கல் அருகே தாய், மனைவி மற்றும் சகோதரரை கொலை செய்து விட்டு விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், மன அழுத்தம் மற்றும் விரக்தி காரணமாக விவசாயி இந்த முடிவை எடுத்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

நாமக்கல் அடுத்த ஓலப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தர் விவசாயி பழனிவேலு (50). இவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இவரது மனைவி கிருஷ்ணவேணி, தாய் செட்டியம்மாள் (75), சகோதரர் காளியண்ணன் (55) ஆகிய மூவரும் வீட்டின் மற்றொரு பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

அரசுக்கு ஒப்படைப்பு

பழனிவேலு தனது நிலம் மற்றும் சொத்துக்கள் அனைத்தையும் அரசுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று பத்திரத்தில் எழுதி தனது உடலில் கட்டி வைத்திருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார் தாய், மனைவி மற்றும் சகோதரரை கொலை செய்து விட்டு பழனிவேல் தற்கொலை செய்திருப்பதை உறுதி செய்தனர்.

இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸார் மற்றும் ஓலப்பாளையம் கிராமத்தினர் கூறியதாவது: பழனிவேல் குடும்பத்தினருக்கு சொந்தமாக ஆறரை ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. காளியண்ணன் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். செட்டியம்மாள் படுத்த படுக்கையாக இருந்தார்.

தற்கொலை சோகம்

குடும்ப பொறுப்புகள் அனைத்தையும் பழனிவேல் கவனித்து வந்தார். கடந்த 5 ஆண்டுக்கு முன்னர் பழனிவேலின் முதல் மனைவி செல்வம், அவரது குழந்தையுடன் வீட்டருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

அதையடுத்து அவர் கிருஷ்ணவேணி என்ற பெண்ணை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இதற்கான மருத்துவச் சிகிச்சை மேற்கொண்டு வந்தனர். பழனிவேல் உறவினர்களுடனும் நெருக்கமாக பழக்காமல் இருந்து வந்தார். இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் அவரது நடத்தை தவறிய பழக்கமும் கொலை மற்றும் தற்கொலைக்கு தூண்டுதலாக அமைந்தது என்றனர்.

நாமக்கல் அருகே தற்கொலை செய்து கொண்ட விவசாயி பழனிவேலு மற்றும் அவரது மனைவி (கோப்பு படம்)

மருத்துவ சிகிச்சையே தீர்வு

நாமக்கல் மாவட்ட மனநல திட்ட அலுவலர் உளவியல் மருத்துவர் எஸ். குணமணி கூறும்போது, `குடும்ப சூழல், பொருளாதாரம், வேலைப்பளு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது. மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க யோகா உள்ளிட்ட பயிற்சிகள் மேற்கொள்ளலாம். அதேவேளையில் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளானவர்கள் கட்டாயம் மருத்துவச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். கொலை மற்றும் தற்கொலை செய்து கொண்ட பழனிவேலு விஷயத்தில், அவர் கடும் மன அழுத்தத்துக்கு ஆளாகியிருக்கலாம்.

தற்கொலை செய்து கொள்ளும் முடிவை அவர் ஏற்கெனவே எடுத்திருக்க வேண்டும். இதுபோன்ற எண்ணம் தோன்றுவோருக்கு உரிய மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் அதிலிருந்து விடுபடலாம்,’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x