

வேலூர் மாவட்டம் ஓச்சேரி அருகே களத்தூர் பாலாற்றில் மணல் குவாரி அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதனை எதிர்த்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மணல் குவாரி அமைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பாலாற்றில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மணலை வாரித் தூற்றி மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் பேசியதாவது: ''மணல் குவாரி அமைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி ஏற்கெனவே ஒரு முறை சுடர் ஏந்தி போராட்டம் நடத்தினோம். தற்போது கிராம நிர்வாக அலுவலர் மணல் குவாரி அமைக்க அடிக்கல் நாட்டிச் சென்றிருக்கிறார்.
மணல் குவாரி வந்தால் களத்தூர், சித்தனைக்கால், சிறுநாவல்பட்டு, சங்கரன்பாடி, புதூர், நல்லூர், பனப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் நீர் ஆதாரம் பாதிக்கப்படுவதுடன்,விவசாயமும் பாழ்படும். ஒட்டு மொத்த கிராமங்களும் அழியும் நிலைக்கு வந்துவிடும்.
இப்போதே குடிநீர் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறோம். குவாரிக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடுவோம்'' என்று கூறிவருகின்றனர்.
இந்தப் போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.