Published : 06 Feb 2014 12:00 AM
Last Updated : 06 Feb 2014 12:00 AM

இந்த முறை அதிமுக-வை எதிர்த்துப் போட்டியிட வேண்டும்- திண்டுக்கல் திமுக தொண்டர்கள் கோரிக்கை

அதிமுக-வுக்கு முதல் வெற்றியைத் தந்த திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக போட்டி யிடுவது உறுதியாகி விட்டதால், காங்கிரஸ் கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டாலும் திமுக இங்கு போட்டியிட வேண்டும் என திமுக தொண்டர்களும் எதிர்பார்க் கின்றனர்.

1972-ல் திமுக-விலிருந்து விலக்கப்பட்ட நான்காவது நாளே அதிமுக-வை தொடங்கினார் எம்.ஜி.ஆர். அடுத்த சில நாட்களில், திண்டுக்கல் எம்.பி-யாக இருந்த ராஜாங்கம் (திமுக) இறந்ததால் 1973-ல் இடைத் தேர்தல் வந்தது. கட்சி தொடங்கிய ஆறே மாதத்தில் மாயத்தேவர் என்ற புதுமுகத்தை எம்.ஜி.ஆர். இடைத்தேர்தலில் நிறுத்தினார். மாயத்தேவரை எதிர்த்து திமுக தரப்பில் பொன்.முத்துராமலிங்கம் நிறுத்தப்பட்டார்.

அப்போது காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் கட்சிக்கு திராவிட கட்சிகளுக்கு இணையான செல்வாக்கு இருந்ததால், அக்கட்சி சார்பில் என்.எஸ்.வி.சித்தன் போட்டியிட்டார். இ.காங்கிரஸ் சார்பில் சீமைச்சாமி போட்டியிட்டார். நான்கு முனைப் போட்டியில் தேர்தல் களம் அனல் பறந்தது. திமுக-வினரும் அதிமுக-வினரும் கருத்துக்களால் மட்டுமின்றி ஆயுதங்களாலும் மோதிக் கொண் டனர். திண்டுக்கல்லில் பிரச்சாரம் செய்த கருணாநிதி, ‘எம்.ஜி.ஆர். தமிழரே அல்ல; உங்கள் ஓட்டு சுத்த தமிழனுக்கா, அந்நியருக்கா’ என்று சொல்லி, தேர்தல் களத்தை மேலும் சூடாக்கினார்.

ஆனால், எந்தப் பிரச்சாரமும் எடுபடவே இல்லை. கடைசியில், அதிமுகதான் வெற்றி பெற்றது. அரசியல் ரீதியாக முதல் அங்கீகாரம் தந்த தொகுதி என்பதால் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி மீது அதிமுகவுக்கு எப்போதுமே தனிப் பாசம் உண்டு. அந்த வகையில் இப்போதும் இங்கு அதிமுக-வே தனது வேட்பாளரை நிறுத்துகிறது. திமுக தரப்பில் கூட்டணிக் கட்சிக்கே தொகுதியை விட்டுக் கொடுத்துவிடலாம் என்ற மனநிலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கு இதுவரை இடைத் தேர்தலையும் சேர்த்து 16 முறை தேர்தல் நடந்துள்ளது. இதில் அதிமுக 7 முறையும் காங்கிரஸ் 6 முறையும் திமுக 3 முறையும் வென்றிருக்கிறது. குறிப்பாக 1980-க்குப் பிறகு திமுக திண்டுக்கல்லில் ஜொலிக்கவே இல்லை. இதை ஆதங்கத்துடன் வெளிப்படுத்தும் திமுக தொண்டர்கள், ‘30 வருசமா கூட்டணிக் கட்சிக்கு தேர்தல் வேலை பார்த்தே களைத்து விட்டோம். எனவே, கூட்டணியைப் பற்றிக் கவலைப்படாமல் இந்த முறை திண்டுக்கல் தொகுதியில் திமுக போட்டியிட வேண்டும். அப்போதுதான் நாடாளுமன்றத் தொகுதிக்குள் திமுக-வின் உண்மையான பலத்தை நாடி பிடித்துப் பார்க்க முடியும்’ என்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x