

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் (எம்டிசி) இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட 212 ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி பல்லவன் இல்லம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிஐடியு தலைவர் கே.சேகர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் மனைவி மற்றும் குழந்தைகளுடன் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது கே.சேகர் பேசியதாவது:
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் தினக்கூலியாக பணியாற்றி வந்த ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் என 212 தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த 212 பேருக்கும் பணி வழங்க வேண்டும் என்றும், அவர்களுக்கு கொடுக்க வேண்டிய ரூ.44 லட்சம் சம்பளத்தை வழங்க வேண்டும் எனவும் தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிகளுக்கு புதிதாக 1,400 பேரை நியமனம் செய்ய இருப்பதாக விளம்பரம் கொடுத்தனர். இதை எதிர்த்து நாங்கள் நீதிமன்றம் சென்றோம்.
அப்போது 212 காலிப் பணியிடங்களை தவிர மற்ற பணியிடங்களை நிரப்புவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால் போக்குவரத்துறை பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு பணி வழங்க மறுத்து வருவதோடு, நீதிமன்றம் சென்று தடை பெறவும் முயற்சி செய்து வருகிறது. நீதிமன்ற உத்தரவுப்படி 212 தொழி லாளர்களுக்கு பணி வழங்க வேண்டும். கொடுக்கப்படாத சம்பளமான ரூ.44 லட்சத்தை வழங்க போக்குவரத்துறை முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் துணைத் தலைவர்கள் பக்தவச்சலம், சந்திரன், பொதுச் செயாளர் பாலகிருஷ்ணன், துணைப் பொதுச் செயலாளர் யோவான், இணைச் செயலாளர் சுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.