

ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலையில் நடந்து விபத்து தொடர்பாக வேலூர் மண்டல மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உயர் அதிகாரிகள் மூவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
வேலூர் ராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் ‘சிட்கோ தோல் கழிவு பொது சுத்திகரிப்பு நிலையம்’ உள்ளது. இதன் கட்டுப்பாட்டில் 86 தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
பொது சுத்திகரிப்பு நிலையத்துக்கு சொந்தமான தோல் கழிவுகளை கொட்டி வைக்கப்படும் தொட்டி, கடந்த மாதம் 31-ம் தேதி நள்ளிரவு உடைந்தது.
அதிலிருந்து வெளியேறிய கழிவுகள் அருகில் இருந்த தனியார் தோல் தொழிற்சாலையின் சுற்றுச் சுவரை உடைத்துக்கொண்டு வெள்ளம் போல பாய்ந்து சென்றது. இந்த விபத்தில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்த 10 தொழிலாளர்கள் இறந்தனர்.
இந்நிலையில், இவ்விபத்து தொடர்பாக வேலூர் மண்டல மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தைச் சேர்ந்த எஸ்.சார்லஸ் ரோட்ரிக்ஸ் (ஜெ.சி.இ.இ.), பி.காமராஜ் (டி.இ.இ), எம்.முரளிதரன் (ஏ.இ.இ) ஆகிய மூவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக மூவருக்கும் சென்னையில் உள்ள தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்துக்கு வரும்படி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. சம்மனை ஏற்று தலைமையகத்துக்கு வந்த மூவருக்கும் நேரடியாக சஸ்பெண்ட் உத்தரவுகள் வழங்கப்பட்டன.